தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரில் ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பக்திநெறி தவறாமல் வாழ்ந்து வந்தார். மைசூர் சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீதர அய்யாவாள், சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஒருகட்டத்தில் இறைவனைத் தரிசிப்பதிலும் சிவநாமம் உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டார். எனவே, பதவியைத் துறந்துவிட்டு நாடெங்கும் சிவதரிசனம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தமிழகத்தில்  காவிரியின் வடக்கு, தெற்குக் கரைகளில் அமைந்திருக்கும் சிவாலயங்களைத் தரிசித்து வணங்கியபடி திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்துக்கு வந்தவர், அங்கிருந்த மகாலிங்க சுவாமியின் திவ்விய தரிசனம் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார். தினமும் மகாலிங்க சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், அருகிலுள்ள தனது வீடான திருவிசநல்லூரில் தங்கிவிட்டார்.




இந்நிலையில் அவருடைய தந்தையார் லிங்கார்யர் மறைந்த திதி வந்தது. அந்தணர்களை அழைத்து தந்தைக்குச் செய்ய வேண்டிய சிராத்தத்தைச் செய்வதில் வெகு சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தார். அவருடைய சிவபக்தியின் மேன்மையை உலகத்தவர்க்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்போல் வேடம் பூண்டு, காவிரியில் நீராடிவிட்டு வந்துகொண்டிருந்த அய்யாவாளின் எதிரில் வந்தார். `ஐயா பசிக்கிறது... ஏதேனும் உணவு தாருங்கள்’  என்று மாறுவேடத்தில் வந்த சிவபெருமான் யாசகம் கேட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட ஸ்ரீதர அய்யாவாள் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது திதி கொடுக்கும் அந்தணர்களுக்கு அளிக்கப்படும் சிராத்த உணவு மட்டுமே தயாராக இருந்தது. இதைத் திதி கொடுத்த பின்பு, வேதியர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதமுள்ள உணவை பசுவுக்குத் தர வேண்டும். ஆனால், இந்த நியதியை மீறி, அந்த உணவை ஏழைக்குத் தந்துவிட்டார் அய்யாவாள்.




இதனால் கோபம் அடைந்த அந்தணர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதுடன், `அந்தணர் உணவை அடுத்தவருக்குக் கொடுத்ததால் உனக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டது. நீ காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, உனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொண்டு வந்தால்தான் திதி கொடுப்போம் என்று கூறிவிட்டனர். ஒரே நாளில் எப்படி காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, திரும்ப முடியும்?’ என்று கலங்கிய ஸ்ரீதர அய்யாவாள் வருத்தத்தோடு அசதியில் உறங்கிவிட்டார் அப்போது கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்து, உன் வீட்டுக் கிணற்றில் கங்கையைப் பிரவேசிக்க செய்வேன்  என்று கூறி மறைந்துவிட்டார். அன்று கார்த்திகை அமாவாசை. ஊரே கூடி கிணற்றடியில் இருக்க, அய்யாவாள் மனமுருகி கங்காஷ்டகம் பாடினார். அப்போது கங்கை நீர் ஆர்ப்பரித்து பொங்கி, வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது. இன்னும் சற்றுநேரம் போனால் ஊரே மூழ்கிவிடும் நிலை. அதைக் கண்ட அந்தணர்கள், தங்களை மன்னிக்கும் படியும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்படியும் கேட்டு கொண்டனர். அய்யாவாளின் சிவபக்தியின் மேன்மையைப் புரிந்துகொண்டதுடன், அய்யாவாளின் தந்தைக்குத் திதி நடத்திக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 




அப்போது அய்யாவாள் மடத்திலுள்ள  கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதாக ஐதிகம். அப்போது அந்தக் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவதும், பக்திப் பரவசமாய் நடைபெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி கார்த்திகை அமாவாசை தினத்தன்று நடைபெறுவது வழக்கம்.  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி அதிகாலை 4.30 மணி முதல், மடத்திலுள்ள உள்ள கிணற்றில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து புனித நீராடுவார்கள். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும்  நீராடி மடத்துக்கு ஈரத்துணியோடு வந்து மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.