தஞ்சாவூர்: கரைபுரண்டு ஓடிய வெண்ணாற்றை பாசனத்திற்காக கல்லணைக்கு முன்பே ஒரு அணை கட்டி தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படும்படி மாற்றியுள்ளனர் என்பது தெரியுங்களா. தெரிந்து கொள்வோம் வாங்க. அந்த பழமை வாய்ந்த அணை எங்கு இருக்கிறது என்று தெரியுங்களா?
ஆழமே காண இயலாத மணற்படுகையில் அடித்தளம் எப்படி அமைப்பது என்ற வியத்தகு தொழில் நுட்பத்தை நம் பழங்கால தமிழர்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டோம் என கல்லணையை ஆய்வு செய்த சர் ஆர்தர் காட்டன் குறிப்பிட்டார்.
கச்சமங்கலம் அணை
கல்லணைக்கு முன்பே அணை கட்டி அசத்தி உள்ளனர் நம் முன்னோர்கள். ஆமாங்க. கல்லணைக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கச்சமங்கலம் அணைதான் அது. கல்லணையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் இந்த அணை உள்ளது. இந்த அணை குறித்து தகவல்கள் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகையில் காணப்படுகிறது. சுமார் 2,200 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இது அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். கரிகால் சோழன் காலத்துக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப்பட்டதாக இருக்கும்.
அப்பகுதியில் இருந்த நேரிமலையைப் பிளந்தும், பாறைகளை வெட்டியும் வெண்ணாற்றின் போக்கை மாற்றிப் பாசனத்துக்குத் திருப்பி விட்டுள்ளனர் நம் முன்னோர்கள்.
சோழ மன்னன் சேந்தன் அழிசி கட்டிய அணை
இந்த அணையைச் சோழ மன்னன் சேந்தன் அழிசி கட்டினான். இங்கு மலை இருந்ததற்கு அடையாளமாக கச்சமங்கலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு வரை பாறைகள் காணப்படுகின்றன. இந்த அணை 169.47 மீட்டர் நீளத்திலும், 2.41 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டுள்ளது. 8 கண்கள் (நீர் செல்லும் பாதை) அமைக்கப்பட்டுள்ளன. வெண்ணாற்றில் வரும் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியதும் தென் கரை மதகு வழியாக ஆனந்த காவேரி வாய்க்காலில் பாய்ந்து கள்ளப்பெரம்பூர் ஏரிக்குச் செல்கிறது.
இதேபோல, வடகரையில் உள்ள மதகு மூலம் பிள்ளைவாய்க்கால் வழியாக அள்ளூர் அழிசிகுடி ஏரிக்குச் சென்றடைகிறது. இந்த அணையின் மூலம் மொத்தம் 17,334 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன என்பதும் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று. இதில், வடகரை மதகு 16 -ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்க மன்னரால் செப்பனிடப்பட்டதாகக் கல்வெட்டுச் சான்று கூறுகிறது.
தற்போது இந்த அணையில் கசிவு ஏற்படுவதைத் தடுக்கப் பழமையை மாற்றாமல் நவீன முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.