தஞ்சாவூர்: பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு நடந்து வருகிறது. இன்னும் 2 வாரத்தில் பல வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கி விடும். அப்புறம் என்ன எந்த ஊருக்கு போகலாம்... என்னென்ன பார்க்கலாம் என்பதுதான் பேச்சாக இருக்கும். அந்த வகையில் தஞ்சையில் செம கெத்தா, கம்பீரமாக என்னை அசைக்க முடியாமா அப்படின்னு சவால் விட்டு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருந்தாலும், இக்கால கட்டிடக்கலையே வியந்து பார்க்கும் தஞ்சை அரண்மனை பற்றி தெரிஞ்சுக்கோங்க... விசிட் அடிச்சு மனசு நிறைஞ்சு போங்க.
சுற்றுலாப்பயணிகளின் முதல் தேர்வு
தஞ்சைக்கு சுற்றுலாவாக வருபவர்கள் தேடி வந்து பார்த்துச் செல்லும் முக்கிய இடத்தில் முதன்மையானதாக உள்ளது. இந்த அரண்மனை தர்பார் மண்டபம், அருங்காட்சியகம், கலைக்கூடம், சரஸ்வதி மஹால், மணிமண்டபம், சங்கீத மகால் என 6 பகுதிகளாக காணப்படுகிறது. சரிங்க இதில் தர்பார் மண்டபத்தையும், அருங்காட்சியகத்திலும் என்ன இருக்கு? பார்த்து வியப்படைய எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
வியப்பில் ஆழ்த்தும் தர்பார் மண்டபம்
பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இந்த தர்பார் மண்டபம் அக்காலத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கும், முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கும் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் வாயிலாக தெரிய வருகிறது. இந்த தர்பார் மண்டபத்தின் முன்பகுதி திறந்த வெளியாகவும் மற்ற மூன்று பகுதிகளும் அடைக்கப்பட்டு மிகவும் பிரம்மிக்க வைக்கும் முறையில் காட்சியளிக்கிறது.
இந்த மண்டபத்தின் மையப்பகுதியில் மன்னர் அமர்ந்து தீர்ப்பு வழங்க சிம்மாசனம் அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 46 தூண்கள் கொண்ட இந்த தர்பார் மண்டபம் சிவன், விஷ்ணு, இந்திரன் ஆகியோர் தேவியர்களுடன் காட்சியளிக்கும் சுதை சிற்பங்கள், தஞ்சை ஓவியங்களுடன் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது. இந்த தர்பார் மண்டபத்தில் ஆரம்பத்தில் இருந்த நாயக்கர்களின் ஓவியங்களும் அதன் பிறகு வந்த மராட்டியர்களின் ஓவியங்களும் ஒன்றோடு ஒன்று மேலே கலந்து மிக அழகான முறையில் காட்சியளிக்கிறது.
இந்த தர்பார் மண்டபத்தில் மேற்கூரையில் இருக்கும் ஒரு அமைப்பானது மிகவும் நுணுக்கமான முறையில் காணப்படுகிறது. மேலும் இந்த தர்பார் மண்டபத்திற்கு பக்கத்தில் இருக்கும் மண்டபமானது நூற்றுக்கும் மேற்பட்ட தூண்களைக் கொண்டு காட்சியளிக்கிறது.
பழங்கால பொருட்கள் நிரம்பிய அருங்காட்சியகம்:
அருங்காட்சியகம் ஆனது அரண்மனையின் முதல் மாடியில் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் சரபோஜி மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், மன்னர்களின் உடைகள், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் மன்னர்கள் பயன்படுத்திய நாற்காலிகள், வீணைகள் மற்றும் அக்காலத்து துப்பாக்கிகள், வாள்கள், பழங்கால பீங்கான் பொருட்கள், சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் 20 நாடுகளின் நாணயங்கள் இந்தியாவில் ஆரம்பகால முதல் இக்காலம் வரை இருக்கும் அனைத்து நாணயங்களும் உதாரணமாக டச்சு நாணயம், சூரத் நாணயம் என அசத்துகிறது.
இப்படி பார்க்க பார்க்க திகைப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் தஞ்சாவூர் அரண்மனைக்கு வாங்க... நம் முன்னோர்களின் திறனை கண்டு மகிழ்ச்சியடையுங்க.