தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 20 பேர் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.
உலகின் முதன் மொழி, மூத்த மொழி, ஆதி மொழி என்ற பெருமைமிகு மொழியான தமிழ் மொழியை வெளிநாட்டினரும் விரும்பி படிக்கின்றனர். தொன்மை மொழி என சிறப்பிக்கப்படுவதோடு அத்தனை பெருமைகளையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உலகின் மற்ற மொழிகளுக்கு மத்தியில் நமது தாய் மொழியான தமிழ் மொழி ஏராளமான சிறப்பம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளமை பெருமைபடக்கூடிய விஷயம் ஆகும். அதிலும் பல்வேறு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கே வந்து தமிழ் கற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அந்த வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகாஈஹி எனப்படும் பாலகும்பமுனி என்பவரது தலைமையில் 8 பெண்கள் உள்பட 20 பேர் நேற்று திட்டை குருஸ்தலம் என அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் "ருத்ர யாகம்", தமிழ் மொழி சிறக்க சிறப்பு யாகம் ஆகியவற்றை நடத்தினர்.
கோயில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர். பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியம் முழங்க கோயிலுக்குள் வலம் வந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடத்தப்பட்டது.
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியின் சிறப்பு மேலும் உயர்வதற்காக யாகம் நடத்தியது திட்டை பகுதி மக்கள் மத்தியில் வெகுவான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோயிலில் இது போன்ற யாகம் நடக்கிறது என்பதை அறிந்து அப்பகுதி மக்கள் வந்து பார்த்து சென்றனர்.
இதுகுறித்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறியதாவது: நான் ஜப்பான் நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அங்கு ஒத்தஹோமா பல்கலைக்கழகத்திலும், ஆசியன் நூலகத்திலும், ஆசியன் வாலைண்டர்ஸ் சென்டர் என்ற பெயரிலும் தமிழ் மொழியை கற்று தருகிறேன். என்னிடம் சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியை கற்று வருகின்றனர்.
நான் தமிழ்மொழியை கற்றவர்களில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளேன். உலகில் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழியில் இருந்து தான், ஜப்பான் மொழி தோன்றியதாக ஜப்பான் நாட்டவர்கள் கருதுகின்றனர். அதற்கான ஒற்றுமை தமிழ் மொழியின் ஓசைகளிலிருந்து ஜப்பான் மொழியின் ஓசையும் ஒற்றுமையாக உள்ளது.
ஜப்பான் நாட்டில் சித்தர்களையும், முருகன், சிவன் பெயர்களை அந்நாட்டுக்கே உரிய மொழியில் பெயர்களை வைத்து அழைக்கின்றனர். நம் தமிழ் மொழி, அதன் பண்பாடு, நமது கலாச்சாரத்தை கற்க ஜப்பானை சேர்ந்தவர்கள் வெகு ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் தமிழத்தின் ஆன்மிகம் குறித்த ஜப்பான் நாட்டவர்களின் தேடலும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள், முக்கியமான சிவன் கோயில்களில் வழிபாடு நடத்துகின்றனர். மேலும் இதுபோன்ற சிறப்பு யாகங்களையும் நடத்தி வருகின்றனர். தற்போது திட்டை கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் நடத்தியுள்ளோம். தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும், தமிழ் மொழியை ஜப்பான் நாட்டில் அதிகமானோர் கற்க வேண்டும். உலக அமைதி, உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் நவக்கிரக கோயில்களுக்கு சென்று அங்கும் சிறப்பு யாகங்கள் நடத்த உள்ளோம் என்றார். மேலும் அவர் கூறுகையில், கோயில்களை வழிபட்டு செல்வதை விட, அந்த கோயில்களில் யாகம் நடத்தி அந்த கோயிலைப் பற்றி முழுமையாக உணர்ந்து செல்கின்றனர் ஜப்பான் நாட்டினர் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நம்முன்னோர்கள் இயற்றிய தமிழ் இலக்கியங்கள், கவிதை நயம், சொல் நயம் மிகுந்தவை. இவை தமிழ் மொழியின் சிறப்பம்சம் ஆகும். இவற்றை வெளிநாட்டினர் விரும்பி கற்கின்றனர். அக்காலம் முதல் இக்காலம் மற்றும் இனி எக்காலத்தோருக்கும் பயன்படும் விதமாக, பொருந்தும் விதமாக தர்ம கருத்துக்கள், வாழ்வியல் செழுமைகள் தமிழில் இலக்கியத்தில் அமைந்துள்ளது. இது மென்மேலும் தமிழ் சிறப்பை உயர்த்துகிறது. இதனால்தான் நம் தமிழ்மொழியை வெளிநாட்டினர் விரும்பி கற்கின்றனர். நமது ஆன்மீகம், வாழ்வியல் முறை போன்றவற்றையும் விரும்புகின்றனர்.