தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஜமாத் தலைவருக்கு வந்த கூரியரில், மண்டை ஓடு இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம் (64). இவர் அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் ஜமாத் தலைவராக உள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு, ஃப்ரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கூரியர் மூலம் ஒரு பெட்டியில் பார்சல் வந்துள்ளது. ஆனால் அதில் அனுப்பியவர் முகவரி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பார்சலை வாங்க முகமது காசிம் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் கூரியர் கொண்டு வந்தவர் உங்கள் முகவரி தெளிவாக உள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்கள்தான் அனுப்பியிருப்பார்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வாங்குவதா? வேண்டாமா என்று யோசனையில் இருந்த முகமது காசிம் சந்தேகத்துடனேயே அந்த பார்சலை வாங்கி உள்ளார். இருப்பினும் முகமது காசிம் பார்சலை பிரிக்காமல் வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் முகமது காசிம் மகன் முகமது மஹாதிர் அந்த பார்ச்சலை பார்த்துள்ளார். ஏன் வந்த பார்சலை பிரிக்கவில்லை என்று கேட்டபோது அனுப்பியவர் முகவரி இல்லை.
அதனால்தான் பார்சலை பிரிக்காமல் வைத்துள்ளேன் என்று முகமது காசிம் தன் மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பார்சலை முகமது மஹாதிர் பிரித்து பார்த்துள்ளார். அதில், மண்டை ஓடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் ரத்தம் போன்று திரவமும் காணப்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசியுள்ளது.
உடன் இதுகுறித்து முகமது மஹாதிர் தனது தந்தை முகமது காசிமிடம் தெரிவித்தார். பின்னர், முகமது காசிம் திருவையாறு போலீசில் இதுபோன்று ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் மண்டையோடு உள்ளது என்று தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டி.எஸ்.பி., ராஜ்மோகன், பார்சலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கூரியரில், அனுப்புநர் பெயர் நவ்மன்பாய் கான் என இருந்தது. அதில் ஒரு மொபைல் எண்ணும் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த மொபைல் எண்ணில் தொடர்புக்கொண்ட போது அது வடமாநிலத்தை சேர்ந்த நபருடடையது என்று தெரியவந்துள்ளது.
அந்த மண்டையோடு ஏதாவது சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது வேறு வகையில் வந்ததா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ஜமாத் தலைவரை மிரட்டுவதற்காக இதுபோன்று யாராவது செய்துள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதும் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.