நாகை அடுத்த நாகூரில் 60 தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என திமுக நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாக புகார் தெரிவித்தனர்.
நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள 10 நகராட்சி வார்டுகளில் 29 நிரந்தரம் மற்றும் 31 ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி தூய்மை பணியாளர் ரமேஷ் என்பவர் சக ஊழியர்களுடன் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர் ரமேஷ் அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பணியை முடித்து ரமேஷ் உணவருந்த சென்ற நிலையில், தூய்மை செய்த இடத்தை 4 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் அஞ்சலை தேவியின் கணவர் நாகரத்தினம் பார்வையிட்டுள்ளார். அப்போது உணவருந்த சென்றவரை போன் செய்து அழைத்து வார்டு கவுன்சிலரின் கணவர் நாகரத்தினம் அப்பகுதியில் சரியாக சாக்கடையை தூய்மை செய்யவில்லை எனக்கூறி தாக்கி அவமரியாதை செய்து விரட்டியதாக கூறப்படுகிறது.
நாகை நகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீதேவி நடவடிக்கை எடுப்பதாக கூறி அலைக்கழித்து வந்து தற்போது பணிமாறுதலில் சென்ற நிலையில், சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து 60 துப்பரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுற்றுலா தளமான நாகூரில் தூய்மை பணிகள் நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. நாயைவிட கேவலமாக தங்களை நடத்தியதாகவும், ஆபாச வார்த்தைகளை கூறி வன்மமாக பேசியதாகவும் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்