தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் செல்வம் வயது 23. செல்வம் தனது இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கர்நாடகா,  கொடைக்கானல், திண்டுக்கல், பழனி, கோபிச்செட்டிபாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

குறிப்பாக இந்த கும்பல் தாங்கள் திருடச் செல்லும் இடத்திற்கு பகலில் சென்று வீடுகளை நோட்டமிட்டு வைத்துக் கொண்டு இரவில் அந்த வீட்டிற்கு சென்று கடப்பாரை மூலம் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சின்னம்மாள் நகர் பகுதியில் உள்ள கணேசன் என்பவரின் வீட்டில் கடப்பாறை மூலம் கதவை உடைத்து பத்து சவரன் நகையை இந்த கும்பல் திருடி உள்ளது. கணேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தற்போது மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் வீட்டில் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள செல்வகுமார் என்பவரின் வீட்டின் கதவையும் கடப்பாறை மூலம் உடைத்து ஐந்து சவரன் நகைகளை இந்த கும்பல் திருடி சென்றுள்ளது. செல்வக்குமார் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்வக்குமார் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவிற்கான ஹார்ட் டிஸ்கையும் அந்த கும்பல் திருடி சென்றுள்ளது.

 

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பெயரில் மன்னார்குடி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திருட்டு நடைபெற்ற வீட்டிற்கு எதிரில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது அதில் கைலி அணிந்து மேலாடை இல்லாமல் துண்டை முகத்தில் சுற்றியபடி மூன்று இளைஞர்கள் கடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் ஒரத்தநாடு தனிப்பிரிவு சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குட்டி யானை வாகனத்தில் வந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அது செல்வம் என்பதும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் கடப்பாரை மூலம் கதவை உடைத்து திருடியது இவர் தான் என்பதும் மீண்டும் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக நோட்டமிட வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவனை கைது செய்து அவர் ஓட்டி வந்த குட்டி யானை வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.