விறுவிறுவென்று காற்றை விட வேகமாக சுழலும் சிலம்பம்.. மின்னல் வேகத்தில் தெறிக்கவிடும் குடும்ப தலைவிகள்!

சிலம்பம் கற்று வரும் தஞ்சையை சேர்ந்த குடும்பத்தலைவியும், சமூக ஆர்வலருமான பொன்னி உதயகுமார், ஆர்த்தி ஹரிஷ், லட்சுமி பாலா சரவணன், ஆனந்தி முரளி ஆகியோர் அசத்துகின்றனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: அன்பைப் பொழியும் அன்னை, அறிவைப் பெருக்கும் ஆசிரியை, அரவணைப்பில் கடவுள், அக்கறையில் சகோதரி, தோளோடு தோள் நிற்கும் தோழி, வாடிய போதெல்லாம் உற்சாகம் கொடுத்து உயர்வை அளிக்கும் உண்மையான வழிகாட்டி என பன்முகம் காட்டும் மகளிரை போற்றும் தினம் இன்று. இவ்வுலகில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய திறமைகளின் சிகரம் பெண்கள் என்றால் மிகையில்லை. மனதிற்கு சரி என்று தோன்றுவதை வெளிகாட்ட தடையாய் இருக்கும் எதையும் உறுதியாக தகர்த்தெறிந்து வீர நடைப்போடும் நம்பிக்கை பெண்கள்.

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற கூற்றை மெய்ப்பித்து இன்று அனைத்து துறைகளிலும் வெற்றி நடை போடுகின்றனர் பெண்கள். முக்கியமாக குடும்பத்தின் அஸ்திவாரமாய் திகழும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஒன்றா... இரண்டா. அனைத்தையும் துவம்சம் செய்து தங்களை நோக்கி வரும் எறிகற்களையும் கூட சாம்பலாக்கும் திறமை நிறைந்தவர்கள்தான் பெண்கள்.

இப்போது பிறப்பதற்கு மட்டும் தவம் செய்ய வேண்டும் அல்ல. வாழ்வதற்கும் பல போர்க்களங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியது உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பெண்களுக்கென்று தனியான வேலையோ, அவர்கள் இதுதான் கற்றுக் கொள்வார்கள் என்ற வரையறையோ இனிமேல் யாராலும் திணிக்க முடியாது. விமானம் ஓட்டுவது முதல் விண்வெளி பயணம் வரை சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் பெண்கள். எப்போதுமே இரட்டை சவாரி செய்வது பெண்களுக்கு சர்வ சாதாரண விஷயம். அதனால்தான் பெண்களால் குடும்பம் என்ற ஒரு சவாரியும் வெளியில் வேலை என்ற மற்றொரு சவாரியிலும் எளிதாக பயணம் செய்ய முடிகிறது. தன்னுடைய உடல்நலத்தை பேணவேண்டிய அக்கறையும் அன்பும் இப்போது உள்ள பெண்களுக்கு மட்டுமே விழிப்புணர்வாக வந்திருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

ஏனென்றால் பெண்கள் தங்களுக்கு எதுவாக இருந்தாலும் வெளியில் செல்வது இல்லை இப்போது மட்டுமே பெண்கள் தங்களுடைய உடல் நலத்தை சீர் செய்து கொள்வதற்காகவும் உடற்பயிற்சிகளையும் அதற்கான சில பயிற்சி முறைகளையும் மேற்கொண்டு இருக்கிறார்கள். அப்படி தான் இந்த பெண்கள் அணியானது நமது போர்க்கலையான சிலம்பத்தை கற்றுக் கொண்டு வருகிறது. சிலம்பம் கற்றுக் கொள்வதால் இரண்டு கைகளுமே அதில் பயன்படுத்தப்படுவதால் வலது மற்றும் இடது மூளை ஒரே நேர பயன்பாட்டிற்கு வரும்போது அவர்களுக்கான கவன ஆர்வம் அதிகரிக்கிறது. கவனம் சிதறுவது குறைகிறது.

Continues below advertisement




இதனால் வேலையில் ஈடுபடும்போது முழு கவனத்துடன் ஈடுபடலாம். அனைத்து பயிற்சிகளுமே மூவிங் முறையில் இருப்பதால் ரத்த ஓட்டமும் சீராகவும் செயல்படுகிறது. குடும்பத் தலைவிகளும் உற்சாகமாய் தம் பாரம்பரிய அற்புதமான கலையான சிலம்பத்தை தஞ்சாவூர் வின்னர் மல்டி மியூரல் அகாடமியில் கற்று வருகின்றனர். காலை நேரத்தில் காற்று கூட இவர்கள் வீசும் சிலம்பத்தில் இருந்து எழும் ஓசையை கண்டு அதிர்கிறது. அவ்வாறு சிலம்பம் கற்று வரும் தஞ்சையை சேர்ந்த குடும்பத்தலைவியும், சமூக ஆர்வலருமான பொன்னி உதயகுமார், ஆர்த்தி ஹரிஷ், லட்சுமி பாலா சரவணன், ஆனந்தி முரளி ஆகியோர் அசத்துகின்றனர்.

இவர்களுக்கான சிறந்ததொரு ஆசானாக சங்கீதா அருண் சிலம்பம் கற்று தந்து வருகிறார். இந்த குடும்பத் தலைவிகள் அதிகாலை 5 மணி முதல் 6 வரை மணி வரை பிற வேலைகளை சற்று ஒதுக்கி விட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

பெண்களுக்கு சிறந்த மதிப்பும் வழிகாட்டுதல் இன்னும் கூடுதலாக கிடைக்கும் போது அவர்கள் மென்மேலும் சிறப்பை அடைவார்கள். சிலம்பம் கற்கும் இந்த குடும்பத்தலைவிகள் சிலம்ப மாராயபட்டைகள் வழங்கும் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களின் முன்னிலையில் கலந்து கொண்டு தங்களின் பயிற்சியினை செய்து காண்பித்து சிலம்பு ஆசான் ராஜேஷ் கண்ணாவிடம் இருந்து மஞ்சள் வண்ண பெல்ட் பெற்றுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. தாங்கள் பெறும் சிலம்ப பயிற்சி குறித்து அவர்கள் கூறுகையில், மனதை ஒருமுகப்படுத்துவது மட்டுமின்றி, எவ்வித சூழலிலும் எங்களை பாதுகாத்துக் கொள்ளும் உறுதியை எங்களுக்குள் ஏற்படுத்தி உள்ளது என்று வீர மங்கைகளாய் தெரிவித்தனர்.

Continues below advertisement