தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் கார்த்திகேயன், அகமத் மைதீன், சந்திரன், கருப்பையா ஆகிய நால்வரும்,  24 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.  மல்லிப்பட்டினத்தில் இருந்து கிழக்கே ஐந்து நாட்டிகல் கடல் மைல் தூரத்தில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் ஒரு மணி அளவில், இடி மின்னலுடன், பலத்த மழை பெய்தது.   இதனை அறிந்த மீனவர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர். எங்கு செல்வது என்ற தெரியாமல் இருந்த நிலையில், அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் பைபர் படகை இயக்கிக் கொண்டிருந்த மல்லிப்பட்டினம்  கே.ஆர்.காலனியைச் சேர்ந்த பெரியய்யா என்பவரது மகன் கருப்பையா (37) சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மற்ற மீனவர்கள் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது




இதையடுத்து மற்ற மீனவர்கள் கருப்பையா உடலை ஏற்றிக் கொண்டு அதிகாலை 4 மணிக்கு  மல்லிபட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து உடற்கூறு ஆய்வு முடிந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போன கருப்பையாவுக்கு திருமணமாகவில்லை. வயதான தாயாரை அவர்தான் பராமரித்து வந்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜூதீன் கூறுகையில்,


மீனவர்கள் இயற்கையை எதிர்கொண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். கடலுக்குள் சென்றால் தான் தங்களது வாழ்க்கை நடத்த முடியும் நிலை உள்ளது. இந்நிலையில், திடீரென நடந்த சம்பவத்தில் மின்னல் தாக்கி கருப்பையா உயிரிழந்து மிகவும் வேதனைக்குரியதாகும். வயதான தாயை கவனித்து வந்த நிலையில் அவரது நிலைமை மிகவும் கேள்வி குறியாகியுள்ளது. கருப்பையாவின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது, தனது குடும்பத்தினர்கள், உறவினர்கள் விட்டு செல்கின்றனர். அவர்களது வாழ்வு, மீன் பிடிக்க செல்லும் போது, திரும்பி வருவார்கள் என்பது கேள்வி குறியாகியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளார்.


தஞ்சை: கூட்டுறவு சங்க நிதியில் 5 லட்சம் மோசடி - திமுகவிற்கு தாவிய நிர்வாகி மீது அதிமுக புகார்