தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பழைய பேருந்து நிலையம் எனப்படும் அய்யாசாமி வாண்டையார் நினைவு பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையங்களில் ஏற்கெனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதியதாக நவீன முறையில் கடைகள் கட்டப்பட்டன.  இங்குள்ள கடைகளை ஏற்கெனவே ஏலம் எடுத்து நடத்திவந்த கடைக்காரர்களில் பெரும்பாலானோர், தங்களது கடைகளை வேறு நபர்களுக்கு, அதிக வாடகைக்கு உள் வாடகைக்கு விட்டு அதிக வாடகை பெற்று வந்தனர்.  இதனையறிந்த மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உரிய விசாரணை செய்தார். பின்னர்,  புதியதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில் பழைய பேருந்து நிலையத்தில் 14.88 கோடி செலவில் 52 கடைகளும், திருவையாறு பேருந்து நிலையத்தில் 13.85 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் மற்றும் 39 கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடப்பட்டன.




இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளை மீண்டும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என பழைய கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மறுத்து புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் விட்டனர். அப்போது திமுகவினர், வணிகர்கள் பல்வேறு போராட்டங்களை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக நடத்தினர்.  ஆனாலும், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி கடைகளை ஏலம் விடப்பட்டது.


இந்த ஏலம் விடப்பட்ட எதிர்த்து பழைய கடைக்காரர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போட்டனர். உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர். பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும் எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததால் பழைய பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை. அதனால் புதிதாக கடைகள் ஏலம் எடுத்தவர்களுக்கும் கடைகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தன.




இந்நிலையில், புதிதாக கட்டப்படுள்ள கடைகளை பழைய கடைக்காரர்களுக்கே ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்து, எதிர் தரப்பினர் தாக்கல் செய்திருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்று மாநராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடப்படும்போது முன்பு கடை வைத்திருந்தவர்கள் அதில் பங்கேற்கலாம். அப்போது பிறர் ஏலம் கேட்கும் தொகைக்கு பழைய கடைக்காரர்கள் கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை ஒதுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்து. ஆனால் பழைய கடைக்காரர்கள் யாரும், மாநகராட்சி அலுவலத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.




இதையடுத்து பழைய பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என கூறப்படுகிறது. பேருந்து நிலையம் திறக்கப்படும் பட்சத்தில் அங்குள்ள கடைகள் புதிதாக ஏலம் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். இதன் மூலம் தஞ்சை மாநகராட்சிக்கு 8 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தஞ்சாவூரில் சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.