தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா இந்தலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா இந்தலூர் நடுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தஞ்சை கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, எங்கள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக குடோன் வசதியுடன் கூடிய இடத்தை அளிக்க ஒருவர் சம்மதித்தார்.


இதனை நம்பி நாங்கள் வயல் அறுவடை செய்து நெல் வைத்துள்ளோம்.  இந்நிலையில் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி கொடுத்ததை எதிர்த்து ஒருவர் அதனை தடுத்து வருகிறார். மேலும் அவர் ஜாதி பிரச்சனையை தூண்டிவிட்டு  இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக எங்கள் கிராமத்தில் கொள்முதல் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் நாங்கள் அவதி அடைந்து வருகிறோம். எனவே எங்கள் கிராமத்தில் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் நிலையம் அமைத்து திறக்க வேண்டும். இதனால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.





தஞ்சை உள்ளிட்ட டெல்டா  குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொட்டி விற்பனை செய்ய காத்திருக்கும் நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஆலக்குடி, கல்வி ராயன் பேட்டை சித்திரக்குடி. பூதலூர், சீராளூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நெல் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ள நிலையில் மழை காரணமாக  விற்பனை செய்ய முடியாமல்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறுவடை செய்த நெல்லை உலர்த்தும் விதமாக தஞ்சை புறவழிச் சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.





த கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சாலையில் தேங்கி கிடக்கின்றன மழை காரணமாக நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக ஈரப்பதத்தில் தளர்வு கொடுத்து 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.பி.யிடம் ஐஜேகே கட்சியினர் மனு:

பாரிவேந்தர் எம்.பி. குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். தஞ்சை எஸ்.பி., அலுவலகத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி. குறித்து ஒரு தனியார் யூடியூப் சேனல் அவதூறு வீடியோவை பரப்பி உள்ளது. பாரிவேந்தர் எம். பி.யின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த அவதூறு வீடியோ  வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவதூறு தகவல்களை ஒளிப்பரப்பிய சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.