தஞ்சை அருகே சித்திரக்குடி, வல்லம், கள்ளப்பெரம்பூர் பகுதிகளில் மழையால் சாய்ந்த குறுவை நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் இறங்கி உள்ளனர். தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதம் மட்டுமே ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே பிடிக்கப்படுகிறது. தற்போதைய மழையை கருத்தில் கொண்டு 20 சத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய, விடிய பெய்த கனமழையால் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப்பயிர்கள் வயலில் சாய்ந்தது. பின்னர் அறுவடைப்பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. இந்நிலையில்தான் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மழையினால் பெரும் பாதிப்பை விவசாயிகள் எதிர்கொண்டனர். குறிப்பாக வல்லம், ஆலக்குடி, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் தண்ணீர் மூழ்கியது.
மேலும் இப்பகுதிகளில் கன மழையால் சம்பா சாகுபடிக்காக வயலில் விடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர் நாற்றங்கால் மழை நீரில் மூழ்கியது. அதே போல் கல்விராயன்பேட்டை பகுதியில் 50 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த நிலையில் இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. தற்போதும் பல இடங்களில் மழை நீர் வடியாமல் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இந்நிலையில் நேற்று மழை இல்லாததால் பல வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை விவசாயிகள் வடிய வைத்தனர். தொடர்ந்து அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு நெல் அறுவடைப்பணிகள் மும்முரமாக நடக்க தொடங்கி உள்ளது.
அந்த வகையில் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை சாலையில் உலர்த்தும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இன்னும் பல இடங்களில் வயலில் தண்ணீர் வடியாமல் உள்ளது. சாய்ந்து கிடக்கும் பயிர்கள் அழுகி விடும் என்பதால் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று அறுவடைப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்படி அறுவடை செய்யப்படும் நெல்லில் அதிக ஈரப்பதம் உள்ளது.
இதை காய வைக்க சரியான களத்து மேடு இல்லாததால் சாலையில் காய வைக்கிறோம். தற்போது கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளின் இந்த கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.