சித்திரை மாதத்தில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே பொன்னேர் உழுதலின் நோக்கம். சித்திரை மாதத்தில் செய்யும் உழவை `நல்லேர் பூட்டுதல்’, `புழுதிஉழவு’, `கோடை உழவு’ என்றும் சொல்வார்கள். தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ மாடுகளைத் தயார் செய்து விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல்’ என்று பெயர்.



பொன்னேர் பூட்டி நிலங்களை உழுது நவதானியத்தை விதைப்பார்கள். இதில் முளைத்து வளரும் தானியங்களை கால்நடைகள் உண்ணும். நிலத்தை மீண்டும் விவசாயத்துக்குத் தயார்படுத்துவதில் விவசாயிகள் ஒன்றுகூடி செய்யும் சித்திரை மாத தொடக்க வழிபாட்டுச் சம்பிரதாயமே இதன் நோக்கம்.

சித்திரை மாசப் புழுதி பத்தரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்ஞ்சா பொன் ஏர் கட்டலாம்னு கிராமத்துல சொலவடையே இருக்கு. மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு, மாலை போட்டு, விளக்கேற்றி, நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு , மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி சுவாமி கும்பிட்டு ஏரை எடுத்துக் கொண்டு தங்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து வரிசையா நிறுத்துவர். ஒவ்வொரு விவசாயிகள் வீட்டிலும் இருந்து விதை நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகுனு என்ன விதை இருக்கோ, அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு குலதெய்வ கோயிலில் வைத்து சுவாமி கும்பிட்டு ஏர் கலப்பைக்கும், மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடம் காட்டினதும் வரிசையாக புறப்பட்டு வயலுக்கு சென்று ஏர்பூட்டி நிற்கும். நிலத்துலயும் பூஜை செஞ்சு  நிலத்தை உழுது சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூவி விடுவார்கள். நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்வதுதான் இந்த பொன்னேர் பூட்டுதல் திருவிழா. 36 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்தாண்டு முதல் பொன்னேர் பூட்டுதல் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டும் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வீரமரசன்பேட்டையில் பொன்னேர் பூட்டும் திருவிழாவுக்காக 18 கிராமங்களை சேர்ந்தவிவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களின் குலதெய்வ கோயிலான பூதலூர் நாச்சியாரம்மன் கோயிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு பூஜைகள் செய்துவிட்டு விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக பூதலூர்- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் வீரமரசன்பேட்டை நான்குவழி சந்திப்பு பகுதியில் உள்ள இந்திரன் கோட்டம் வயலுக்கு சென்று அங்கும் வழிபாடு நடத்தினர். பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர்.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர். பின்னர் தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்கினர்.

ஏற்படுகளை பூதலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இந்திரன் கோட்டம் அமைப்பினர் செய்திருந்தனர்.