திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேசம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் வயது 69. இவர் கடந்த 1978 முதல் 2012 வரை காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர்   மன்னார்குடி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்றுள்ளார். உயரம் தாண்டுதல் வீரரான இவர் ஓய்வு பெற்றபின் மூத்தோருக்கான தடகளப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று 2012 முதல் பயிற்சி எடுத்து வருகிறார்.

 

மேலும் கடந்த ஏழு வருடங்களாக தேசிய அளவிலான தடகளப் போட்டியில் நடராஜன் பங்கு பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள கண்டிவாராவில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 42 வது தேசிய மூத்தோர் தேசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்ட நடராஜன் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 20 பேர் கலந்து கொண்ட நிலையில் 27 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

 

அதேபோன்று 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 22 பேர் கலந்து கொண்ட நிலையில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இந்த நிலையில், பதக்கம் வென்று மன்னார்குடி திரும்பியுள்ள அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் இவரை அலுவலகத்திற்கு அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். கடுமையான பயிற்சி மற்றும் ஏழு வருட  பயிற்ச்சிக்கு பிறகு சாதித்து காட்டிய ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.