தஞ்சாவூர்: சென்னையில் அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் மருத்துவர் செந்தில் வேண்டுகோளின்படி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழக அரசு டாக்டர் சங்கத் தலைவர் வினோத் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ரவீந்திரன், செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது டாக்டர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்க கூடாது என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் நூற்றுக்கணக்கான டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தஞ்சை மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க தலைவர் வினோத் கூறியதாவது:
சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீது கொடூர தாக்குதல் நடந்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தஞ்சை மையம் சார்பில் இந்த தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு மருத்துவ சேவையை செய்ய முடியாத அளவுக்கு தாக்குதல் நடைபெற்றது வேதனையை அளிக்கிறது.
இது போன்ற சம்பவங்களால் இனி வரும் காலங்களில் மருத்துவ ஊழியர்கள், டாக்டர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோயாளிகளுக்கு குறைகளை நிவர்த்தி செய்யாமல் சேவை செய்பவர்களை தாக்குவதை ஏற்க முடியாது. இன்று அரசு டாக்டர்கள் பணிகளைப் புறக்கணித்து உள்ளதால் புறநோயாளிகள் பிரிவு அறுவை சிகிச்சை பிரிவு செயல்படாது. அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் போன்றவை தொடர்ந்து செயல்படுகிறது. பணியிடங்களில் டாக்டர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய போலீசார்கள் நியமித்து 24 மணி நேரமும் டாக்டர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.. ஆனால் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். ஏற்கனவே ஐந்தாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படும்போதுதான் சேவையை திறம்பட செய்ய முடியும். டாக்டர்களும் நேரம் காலம் கருதாமல் சேவையை ஆற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சிகிச்சைக்காக வெகு தொலைவில் இருந்து வந்த வயதான நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.