தஞ்சாவூர்: அட்ரா சக்க... ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு ஏற்பாடா? செமப்பா என்பது போல் அமைந்துள்ளது தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா. இதை யார் திறந்து வைத்தார்கள் தெரியுங்களா? காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மலிவு விலை மருந்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், திருச்சி கோட்ட முதன்மை வர்த்தக மேலாளர் வி. ஜெயந்தி, மலிவு விலை மருந்தக திட்டத்தின் தமிழ்நாடு தலைவர் நாராயணன், திருச்சி திட்ட மேலாளர் நஷீர் அஹமத், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், மாமன்ற உறுப்பினர் பி.ஜெய் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலிவு விலை மருந்தகம் இந்தியாவில் கடந்த நவம்பர் 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 14,300 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,270 மருந்தகங்கள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மலிவு விலை மருந்தகத்தின் மூலம் இதுவரை மக்கள் ரூ. 25,000 கோடி சேமித்துள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு மற்றும் ரூ.120 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் ரூ. 2000 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மலிவு விலை மருந்தகத்தின் மூலம் 7 ஆயிரம் பேர் ரூ.4,33,000 மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தஞ்சாவூரில் இன்று மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காரைக்கால், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட உள்ளது.
இந்த மலிவு விலை மருந்தகத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கும், உள்ளூரில் வசிக்கும் பொது மக்களுக்கும் தங்களுக்கு தேவையான மருந்துகளை குறைவான விலையில் வாங்கி பயன்படுத்த முடியும். இந்தியாவில் வரும் 2025 -26 ஆம் ஆண்டுக்குள் 25,000 மலிவு விலை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் விலை மலிவு மருந்தகம் திறக்கப்பட்டது குறித்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுபோன்று முக்கியமான இடங்களில் விலை மலிவு மருந்தகங்கள் அமைப்பது மக்களுக்கு மிகுந்த பயனை ஏற்படுத்தும். முக்கியமாக ரயில் பயணிகளுக்கு இது உபயோகமான ஒன்றாகும். இதற்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும். அதிக விலையில் உள்ள மருந்துகளை மக்கள் பயன்படும் வகையில் விலை மலிவாக வழங்கும் இந்த மருந்தகங்கள் எங்கே இருக்கிறது என்று தேடி செல்வதை விட இதுபோன்று முக்கியமான இடங்களில் அமைத்தால் மக்கள் எளிதாக தங்களுக்கு தேவையான மருந்துகளை சிரமமின்றி குறைவான விலையில் வாங்கி செல்வார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.