கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் காய்த்ரிஅசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், திமுக உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் எழுந்து கூட்டம் நடைபெறும் நாளை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும், கூட்டம் நடைபெறும் தினத்தில் மட்டுமே உறுப்பினர்களிடம் தீர்மான பொருட்கள் தொடர்பாக கையெழுத்து பெற வேண்டும். முன்கூட்டியே கையெழுத்து பெறக்கூடாது, வழக்கம் போல் உறுப்பினர்கள் அமர நாற்காலிகள், மேஜைகள் வழங்க வேண்டும், தரையில் அமர வைக்கக்கூடாது. ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான கட்டிடத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எதனடிப்படையில் தாரை வார்க்கப்பட்டது என்பதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.




இது தொடர்பாக ஒன்றியக்குழுத் தலைவர் காயத்ரி அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கூட்டம் நடத்தப்பட்டு 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய குழு கூட்ட அரங்கில் பர்னிச்சர்கள் இல்லை என முன்பு கூறினோம், பர்னிச்சர்கள் வாங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பர்னிச்சர்களை வாங்கித் தரவில்லை. இதனை சுட்டிக்காட்டவே தற்போது நடைபெற்ற கூட்டம் தரையில் ஜமுக்காளம் விரித்து அதில் நடைபெற்றது என்றார்.


இது குறித்து திமுக மூத்த உறுப்பினர் கோமதிசண்முகம் கூறுகையில்: கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை இல்லாத வகையில், தற்போது இதன் செயல்பாடு உள்ளது. தலைவர் இருக்கை அருகே துணைத் தலைவருக்கு இருக்கை வழங்க வேண்டும். இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் இருக்கைகள் வழங்காமல், தரையில் அமர வைத்துள்ளனர். உறுப்பினர்களிடம் கூட்டம் தொடர்பாக முன்கூட்டியே கையெழுத்தை வாங்குகின்றனர். ஆறு மாத காலமாக கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு பங்கேற்பு பயணப்படி வழங்குவதில்லை. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரின் செயல்பாடுகள் தன்னிச்சையாக உள்ளது என்றார்.




இது குறித்து திமுக உறுப்பினர் கூறுகையில்,ஒன்றிய செயலாளராக அசோக்குமாரும், கணேசனும் பதவியில் இருக்கும் போதே, இருவருக்கும் ஒத்துக்கொள்ளாது. அதன் பின்னர், கும்பகோணத்தை ஒன்றியத்தை மூன்றாக பிரித்து, வடக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டது.  இதில் அசோக்குமார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் அதிகஅளவில், பாஸ்கர் ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் கடும் அதிர்ப்தியில் இருந்து வந்தார். இதே போல் கடந்த கூட்டங்களில் ஒன்றிய குழு துணை தலைவரும், ஒன்றியசெயலாளருமான கணேசனுக்கு, மேடையில் நாற்காலி  வழங்காமல் மற்ற உறுப்பினர்களுடன் அமர வைத்து வந்தார். இது போன்ற பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது நடந்துள்ள கூட்டத்தில், வேண்டும் என்றே, துணை தலைவருக்கு நாற்காலி வழங்க கூடாது என்ற ஒரே காரணத்தால், அனைத்து உறுப்பினர்களையும் ஜமுக்காளம் போட்டு அமர வைத்தது, எங்கும் நடக்காத செயலாகும்.




கும்பகோணம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கோசி.மணி, துரை போன்றோர் கட்டிகாப்பாற்றி வந்த திமுக உட்கட்சி பூசலால் இரண்டாக இருப்பது வேதனையான செயலாகும். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி தஞ்சைக்கு வரும் நிலையில், கும்பகோணம் ஒன்றியத்தில் நடைபெறும் கட்சி பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.தவறும் இருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.