மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின்,465 ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்க உள்ளது. நாகையை அடுத்த நாகூரில் உலகப் பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த தர்காவில், நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல் ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாள் கந்தூரி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 465-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. விழாவை முன்னிட்டு, பாய்மரம் எனப்படும் கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை நடைபெறும். அதற்கு முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவாஓதப்பட்டு மங்கள வாத்தியங்கள் அதிர்வேட்டுகள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்படும், அப்போது அங்கு கூடியிருக்கும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கப்படும்.
தொடர்ந்து ஜனவரி 4 ஆம் தேதி கொடியேற்றும் நிகழ்வும், 13 ஆம் தேதி சந்தனக்கூடு ஊர்வலமும், 14 ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை எஸ்பி ஜவஹர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தர்காவில் பக்தர்களுக்கு செய்துள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தர்கா நிர்வாக அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, நாகூர் ஆண்டவர் சமாதி, தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், தர்கா குளம், அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் வரவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்துள்ளார். விழா முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நாகூர் தர்கா நிர்வாகக் குழு, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் நகராட்சி ஆகியன இணைந்து செய்து வருகின்றன.