தஞ்சாவூர்: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பறக்கு படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த பாலாஜி என்பவரிடம் இருந்து 2.70 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


எண்ணெய் விற்பனை பணம்


விசாரணையில் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எண்ணெய் விற்பனை செய்து விட்டு வசூலான தொகையுடன் பாலாஜி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இருந்த போதிலும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் சித்திரவேல் தலைமையிலான அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஒரத்தநாடு தாசில்தார் சுந்தரச் செல்வியிடம் ஒப்படைத்தனர்.




உர மூட்டைகள் பறிமுதல்


இதேபோல் ஆவணங்களின்றி லாரியில் கொண்டு வரப்பட்ட 240 உர மூட்டைகளைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் சி. அஜய்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.


அப்போது சேலத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்ததும், அதற்குரிய ஆவணங்கள் ஓட்டுநரிடம் இல்லாததும் தெரிய வந்தது.


இதையடுத்து, உர மூட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் காண்பித்து எடுத்துச் செல்லுமாறு லாரி ஓட்டுநரிடம் தேர்தல் பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.


ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல்


இதேபோல, தஞ்சாவூர் அருகே திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நெடார் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஏ. ராஜீவ்பாண்டி தலைமையில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் லாரியில் ரூ. 1.13 லட்சம் ரொக்கம் இருந்ததும், கும்பகோணத்திலுள்ள நெகிழி முகவரிடம் நெகிழி வாங்குவதற்காகக் கொண்டு செல்வதும், ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து, ரூ. 1.13 லட்சம் ரொக்கத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வாசல் பகுதியில் வைக்கோல் வாங்க சென்ற சாமுவேல் இடம் இருந்து ரூ.59,750 ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். பேராவூரணியில் இருந்து வைக்கோல் வாங்குவதற்காக ஓட்டுநர் சாமுவேல் லாரியில் திருத்துறைப்பூண்டி சென்றுள்ளார். அப்போது நெய்வாசல் பகுதியில் சோதனையில் இருந்த பறக்கும்படி அதிகாரிகள் உரிய ஆவணம் என்று எடுத்துவரப்பட்ட ரூ.59,750 ரொக்கத்தை பறிமுதல் செய்து ஒரத்தநாடு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.