தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நந்தியம் பெருமான் பிறப்பு விழா மற்றும் நந்தியம் பெருமான் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நந்தியம் பெருமான் பிறப்பு விழா நேற்று தொடங்கியது.
மிகவும் பழமை வாய்ந்த கோயில்
மிகவும் பழமை வாய்ந்தது திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில். இக்கோயிலில் ஐயாறப்பர் எழுந்தருளியுள்ள காவிரிக் கோட்டம் உள்ளது. தெற்கே தென் கயிலாயம், வட திசையில் வட கயிலாயம் என ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளன.
இதைச் சுற்றி பெரிய திருமதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஏறத்தாழ 15 ஏக்கர் பரப்புள்ள இத்திருக்கோயில், பரப்பளவில் தஞ்சைப் பெரியகோயிலைவிட மூன்று மடங்கு பெரியது.
ராஜராஜ சோழன் மனைவியால் கட்டப்பட்டது..
ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் எழுப்பப்பட்டது. மேற்குக் கோபுரம் முதல் சுற்று, நடை திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தெற்குக் கோபுரம் போன்றவை ஆணைய பிள்ளையும், அவருடைய தம்பி வைத்தியநாதரும் எழுப்பியவை. இங்குள்ள வட கயிலாயம் என்ற லோகமாதேவீச்சரம், முதலாம் ராஜராஜ சோழனின் மனைவி லோகமாதேவியால் கட்டப்பட்டது.
பட்டாபிஷேகம் பார்த்தால் பதவி உயர்வு..
இதை தொடர்ந்து, பட்டாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பட்டாபிஷேகம் பார்க்கும் பக்தர்களுக்கு பதவி,பதவி உயர்வு, வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், குடும்பங்கள் செல்வ செழிப்போடு விளங்கிடும், விவசாயம் செழிக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது போல பட்டாபிஷேகம் பார்ப்பதின் பலன்கள் பக்தர்களுக்கு இறைவன் அருள் புரிவார் என்பது ஐதீகம்,
தொடர்ந்து ஐயாறப்பர் அம்பாள், அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், சுயசாம்பிகை தனி பல்லக்கிலும் நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூர் மாவட்டம் திருமழாபாடிக்கு செல்கிறது.
திருக்கல்யாண உற்சவம்..
திருமழப்பாடியில் இரவு வைத்தியநாதன் சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நந்திபார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள் அதனை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பிறகு சுவாமி புறப்பட்டு திருவையாறை வந்தடையும். விழா ஏற்பாடுகளை தருமபுரஆதினம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.