தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக பிரியங்கா இன்று முறைப்படி பொறுப்பேற்றார்.


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தீப ஜேக்கப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் பணி மாறுதலில் செல்வதை அடுத்து புதிய கலெக்டராக மகளிர் திட்ட செயல் இயக்குனராக பணியாற்றி வந்த பிரியங்கா இன்று காலை முறைப்படி பொறுப்பேற்றார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் விவசாயப் பகுதி ஆகும். அதனால் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெற்று தர பாடுபடுவேன். பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.


அரசின் நல திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். குறுவை சாகுபடி குறைந்த நிலையில் சம்பா சாகுபடியை விவசாயிகள் தைரியமாக தொடங்க தமிழக அரசின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்படும்.


கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை மாவட்டத்திற்கு தற்போது தான் மீண்டும் பெண் கலெக்டர் பொறுப்பேற்கிறார். தஞ்சை மாவட்டத்திற்கு இவர் 2 வது பெண் கலெக்டர் ஆவார். 2015ல் ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றவர்  பயிற்சி ஆட்சியராக கோயம்புத்தூரில் பணியாற்றினார். ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை சார் ஆட்சியராக பணி செய்தார். அதன் பிறகு திருப்பத்தூரில் சார் ஆட்சியர், கூடுதல் இயக்குனர் (வளர்ச்சி ) மதுரையில் பணி செய்தார். பின்னர் செயல் இயக்குனராக மகளிர் மேம்பாட்டு இயக்குநகரத்தில் பணியாற்றியவர். தற்போது தஞ்சை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.