தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் காந்திஜி வணிக வளாகத்தில் கடை ஒதுக்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதால், இதை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒத்தி வைப்பதாக மேயர் சண்.ராமநாதன் அறிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர்.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் கோபால், காந்திமதி, அமமுக உறுப்பினர் கண்ணுக்கிணியாள், திமுக உறுப்பினர்கள் ஆனந்த், நீலகண்டன் ஆகியோர் ஒரே நேரத்தில் பேசினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அவர்கள் பேசுகையில், தஞ்சாவூர் காந்திஜி வணிக வளாகத்தில் துணி கடை ஒன்றுக்கு பொது ஏலம் விடாமல், தனிநபர் ஏலமாக முன்பு பணியாற்றிய ஆணையர் சரவணக்குமார் அனுமதி வழங்கினார். அதில் பல முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடை நடத்தி வருபவர் நீதிமன்றத்தில் மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, துணி கடைக்கு வழங்கப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர். மேலும் இதற்காக அவசர கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று இருதரப்பினரும் மாறி மாறி பேசினர்.
இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, இந்த தீர்மானத்தை ஒத்தி வைப்பதாக மேயர் தெரிவித்து, கூட்டத்தை முடித்துவிட்டு சென்றார்.
பின்னர் கூட்டத்தைவிட்டு வெளியே வந்த அதிமுக, அமமுக உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான காந்திஜி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பொது ஏலமாக விடாமல், தனி நபர் ஏலமாக விட்டதில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
மூன்றாண்டுகளுக்கு மட்டும் ஏலம் விடாமல் 9 ஆண்டுகளுக்கு என மாநகராட்சி விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளனர். முன்பு தஞ்சாவூரில் பணியாற்றிய ஆணையர் சரவணக்குமார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்த முறைகேடுகளிலிருந்து தப்பிக்க காந்திஜி வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்ட ஏலம் ரத்து செய்வதாக அவசர கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனவே தான் நாங்கள் இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளோம். மேயர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பேசினோம் என்றனர்.