தஞ்சாவூர்: விவசாய பூமியான தஞ்சையில் சாப்ட்வேர் கம்பெனிகள் தடம் பதிப்பது இங்குள்ள வாலிபர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் நிலை மாறி வருகிறது. 


சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், செகந்திரபாத், புனே என்று பெரிய நகரங்களில் மட்டுமே சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்கப்படுவது வழக்கம். இதையடுத்து, இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் நிறுவனங்கள் வந்தாலும், உலகளாவிய பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மூன்றாம் நிலை நகரங்களில் சாப்ட்வேர் நிறுவனங்கள்


ஆனால் மூன்றாம் நிலை நகரங்களில் சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்கப்படுவது என்பது கானல் நீர் போல் கனவாகவே இருந்து வந்தது. இந்த சவால்களுக்கு இடையே மூன்றாம் நிலை நகரமான தஞ்சாவூரில் சாப்ட்வேர் நிறுவனங்களின் வருகை சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தஞ்சாவூரில் முதல் முதலாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கே.ஆர்.ஏ. என்ற சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இங்கு ஏறத்தாழ 15 சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. இதில், தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை புறவழிச்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சர்டானிக்ஸ் நிறுவனம் ஏறத்தாழ 300 ஊழியர்களுடன் பெரிய நிறுவனமாக உருவெடுத்து சாதனை படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 5 நிறுவனங்கள் சிறிய அளவில் தலா 10 , 15 ஊழியர்களுடன் செயல்படுகின்றன. மற்றவை நடுத்தர நிறுவனங்களாக ஏறக்குறைய தலா 40 ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன.


வெளிநாட்டை சேர்ந்த சாப்ட்வேர் வாடிக்கையாளர்கள்


பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்க நாட்டு ப்ராஜெக்ட்களை எடுத்து செய்து வருகின்றன. சில நிறுவனங்களுக்கு துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ஹாங்காங், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சாப்ட்வேர் தயாரிப்பு, கண்காணிப்பு பணி, டேட்டா அன்டு அனலிட்டிக்ஸ் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன.


டெல்டா மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பெரு நகரங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு வேதனைகளையும் தாங்கி சம்பாதிக்கும் வாலிபர்களுக்கு இங்கேயே வேலை கிடைப்பதால், இந்த சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. பெரு நகரங்களில் கிடைக்கக்கூடிய அளவுக்கு இங்கு ஊதியம் இல்லாவிட்டாலும், உள்ளூரிலேயே பி.இ., பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி. போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு நியாயமான சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.


பணியில் சேரும் இளைஞர்களுக்கு சாப்ட்வேர் நிறுவனமே பயிற்சி


முதலில் பணியில் சேரும் இளைஞர்களுக்கு சில வாரங்களுக்கு சாப்ட்வேர் நிறுவனமே பயிற்சி அளிக்கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கேற்ப படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் ஊதியம் வாங்குபவர்களும் இருக்கின்றனர். சராசரியாக ரூ. 20 ஆயிரம், ரூ. 30 ஆயிரம் ஊதியம் வாங்குகின்றனர். 


பயிற்சி பெற்ற பலர் வொர்க் பிரம் ஹோம் என்ற அடிப்படையில் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு சொந்த வேலையைச் செய்வதற்கு நேரம் கிடைக்கிறது. சொந்த ஊரிலேயே வேலை செய்யும்போது தங்களது ஆற்றலை மேலும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக இருக்கிறது.


சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நுழைவு வாயில்


இது குறித்து இன்போரியாஸ் நிறுவன துணைத் தலைவர் (என்ஜினியரிங்) டி. பழனிசாமி கூறியதாவது: மூன்றாம் நிலை நகரங்கள்தான் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நுழைவு வாயிலாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களில் முன் அனுபவம் கேட்கப்படுகிறது. இதுபோன்ற இளைஞர்கள் இங்குள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் முன் அனுபவத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், மொழித் தொடர்பு திறனையும் மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது.


சிறப்பாக பணியாற்றும் இளைஞர்கள்


ஏறத்தாழ 60 சதவீதம் பேர் சராசரி பணியாளர்களாக இருந்தாலும், அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மூலம் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். பி.இ. படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் கிராமங்களில் சிரமப்படும் இளைஞர்களுக்கு இங்குள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் மிகப் பெரிய வரமாக அமைந்துள்ளது. இங்கு பயிற்சி பெற்று பெரு நகரங்களுக்கு கூடுதல் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் இளைஞர்களும் நிறைய இருக்கின்றனர். நியாயமான ஊதியம் பெறும் இளைஞர்கள் பலர் இந்த ஊரிலேயே தொடர்வதற்கு விரும்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் ஏறத்தாழ 55 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட்டுள்ள நியோ டைடல் பூங்கா மூலம், ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அலுவலர்கள் உறுதியளிக்கின்றனர். எனவே, எதிர்காலத்தில் மூன்றாம் நிலை நகரமான தஞ்சாவூரும் சாப்ட்வேர் துறையில் முன்னணி நகரமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.