கலைகளின் நகரம் என்றால் தஞ்சாவூர் என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள்.  பல கலைகளின் தலைநகரமாக,  கலைநகரமாக உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது தஞ்சை. காணும் அனைத்து பொருட்களிலும் கலையம்சத்தை கொண்டு வந்தது தஞ்சைதான்.


மண்ணில் ஆரம்பித்து தங்கம் வரை அனைத்திலும் கலையம்சம்தான். உயிரோட்டம் நிறைந்த ஐம்பொன் சிற்பங்கள், நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தஞ்சாவூர்த் தட்டு, தலையாட்டி பொம்மை என்று எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். அதில் முக்கியமான கலையம்சம் நிறைந்ததுதான், தஞ்சை மண்ணுக்கே உரிய ஒரு கலைதான் நெட்டிச் சிற்பக்கலை.


மிக நுணுக்கம் நிறைந்த, வேலைப்பாடுகளுடன் கூடிய, அற்புத அழகு மிளிரும் நெட்டிச்சிற்பங்கள் தஞ்சையின் கலைப் பெருமையின் மற்றொரு அம்சம். நெட்டி என்பது குளத்தில் விளையும் ஒரு தாவரம். மஞ்சள் நிறப்பூவும், நெல்லி இலை மாதிரியான இலையும் இருக்கிற இந்தத் தாவரத்துக்கு, தாமரைத்தண்டு போலவே பச்சை நிறத்தில் தண்டு இருக்கும். தண்டில் கணுவுக்குக் கணு ரோமம் போன்ற வேர்களும் இருக்கும். தண்டோட நடுவுல சின்னதா துவாரம் இருக்கும். நாலிலிருந்து அஞ்சடி உயரத்துக்கு வளரும். ஜனவரி மாதத்தில் இந்தத் தண்டை அறுவடை பண்ண முடியும். தண்டு கால் அங்குலத்திலிருந்து நாலு அங்குலம் வரை தடிமனாக உருண்டை வடிவத்தில் இருக்கும். வெட்டும்போது பச்சை நிறத்தில் இருக்கும் இது காயவச்சதும் பழுப்பு நிறத்துக்கு மாறிடும். தண்டுக்குள் இருக்கிற சக்கை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த சக்கையிலதான் நெட்டிச்சிற்பங்கள் செய்யப்படுகிறது. சிற்பத்துக்கு ஏற்ற மாதிரி சக்கைகளை சதுரம், உருண்டைன்னு பல வடிவங்களில் வெட்டி எடுக்கப்பட்டு செய்யப்படுகிறது.
ராஜராஜ சோழனின் அரண்மனையில நெட்டிப்பூக்கள் வச்சி அலங்கரிக்கப்பட்டு இருந்ததாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தக் காலத்திலேயே நெட்டியைப் பறித்து மாலையாக கட்டி மாடுங்களுக்கு அணிவிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. கூர்மையான கத்தி, பிளேடு, கத்தரி ஆகியவற்றை கொண்டுதான் நெட்டி கலைப்பொருட்கள் செய்யப்படுகிறது.  மராட்டிய மன்னர்கள் இந்தக் கலையில் ஆர்வமா இருந்தாங்க. மானியம்கூடக் கொடுத்துள்ளனர்.


சுவாமி சிற்பங்கள் மட்டுமில்லாம மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அம்பேத்கர், சாய்பாபா, மனுநீதிச்சோழன் போன்ற உருவங்கள், கிராமம், தொழிற்சாலை மாடல்களும் செய்து கொடுக்கப்படுகிறது. வாழ்த்து மடல், பொக்கே, மாலை என எதை வேணாலும் நெட்டியில செய்ய முடியும். முக்கியமாக எந்த வர்ணமும் பூசப்படுவதில்லை என்பதுதான் தனிச்சிறப்பு.


தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய விழாவான மாட்டுப் பொங்கலின்போது மாடுகளுக்குப் பயன்படுத்தும் மாலையினைச் செய்வதற்கு இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன் பயன்பாடு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டு வருகிறது. இதனோடு வேறு எந்தப் பொருட்களையும் சேர்க்காமல் நெட்டியை மட்டுமே கொண்டு செய்யப்படுவதும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வண்ணம் தன்மை மாறாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும்.


தஞ்சைப் பெரிய கோயில், திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், கும்பகோணம் மகாமகக் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவாரூர் ஆழித்தேர், கோயில் அமைப்புகள், உருவ அமைப்புகள் என செதுக்கப்படும் நெட்டிச்சிற்பங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் நிறம் மாறாமல் தந்தத்தில் செய்யப்பட்டது போல் வெண்மை மாறாமல் இருக்கும். காலத்திற்கு ஏற்ப இயற்கை வடிவம் முதல் வேண்டியவற்றை அப்படியே நெட்டியில் செய்கின்றனர்.