தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் கோவிலில் கடந்த நவ.26ம் தேதி கோவிலுக்கு வந்த ரெட்டிபாளையம் சாலையைச் சேர்ந்த உமாவிடம் இருந்து, பத்கர் போல நடித்து அவரது ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றவரை, அப்பகுதி மக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேற்கு போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தியபோது, அவர் திருவையாறைச் சேர்ந்த ரமேஷ் (57) என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த ரமேஷ் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து மருத்துவக்கல்லுாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




 வாய்க்காலில் இளைஞர் சடலம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக கிடந்த இளைஞர் மீட்கப்பட்டார்.

சூரப்பள்ளம் அருகே வாய்க்காலில் ஒரு வாலிபர் பைக்குடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஆலத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் கோபால் (30) என்பது தெரிய வந்தது.

கோபால் பட்டுக்கோட்டைக்கு வந்துவிட்டு ஆலத்தூர் திரும்பிச் சென்றுள்ள நிலையில் மரத்தில் மோதி பைக்குடன் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





விபத்தில் பெண் கை துண்டிப்பு

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உலையகுன்னம் கிராமத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனத்தில் புலவஞ்சி கிராமத்திற்கு துக்கத்திற்காக சென்று கொண்டிருந்தனர்.  

பழைய மதுக்கூர் அருகே சென்ற பொழுது திடீரென எதிரே வந்த மற்றொரு டாட்டா ஏஸ் வாகனம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் உலையக்குன்னம் கிராமத்திலிருந்து வந்த ஆறு பேர் காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் இந்திராணி என்ற பெண்ணுக்கு கை துண்டிக்கப்பட்ட நிலையிலும், கஸ்தூரி என்ற பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உணர்வு இல்லாத நிலையில், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மற்ற நால்வருக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மதுக்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.