தஞ்சையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதை தடுக்கவும், அவற்றை வேறு ஊர்களுக்கு கடத்தி செல்வதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அந்தந்த சரக பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி எஸ்.பி. ஆனந்தம் நகர் பகுதியில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஸ்கூட்டரில் ஒரு மூட்டை எடுத்து வரப்பட்டு இருந்தது. அந்த மூட்டையை சோதனை செய்தபோது ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 31 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


 





தொடர்ந் அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் , அவர் தஞ்சை கரந்தை வலம்புரி தெருவை சேர்ந்த மகேஸ்வரன் (35 ) என்பதும், விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்ட்டரை பறிமுதல் செய்தனர். இவை பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டதா?, எந்த பகுதியில் யாரிடம் இருந்து வாங்கி வந்தார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது

தஞ்சை பூச்சந்தை அருகே தெற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது இடத்தில் இரண்டு பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் தஞ்சை பூக்காரத் தெருவை சேர்ந்த முரளி, அசோக் என்பது தெரியவந்தது. இதேபோல் தஞ்சை மாரிக்குளம் சுடுகாடு பகுதியில் அரிவாள்களுடன் நின்ற முனியாண்டவர் காலனியை சேர்ந்த சக்திவேல் (30 ), ஆரோக்கியராஜ் (27), வடக்கு வாசலை சேர்ந்த ஜெய்சங்கர் (52), பூக்கார தெருவை சேர்ந்த கருப்பு பிரபா( 32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.