தஞ்சாவூர்: தஞ்சை அருகே 8.கரம்பை பைபாஸில் காதலர்களை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். வழிப்பறியில் இப்படி ஒரு நூதனமாக பணம் பறித்து வந்துள்ளனர் இந்த 5 பேரும் என்பது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காதலியுடன் பைபாஸில் பயணம் செய்த வாலிபர்
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் தமிழரசன் (24). இவர் கடந்த 16ம் தேதி தனது காதலியுடன் திருமானூருக்கு செல்வதற்காக பைக்கில் புறப்பட்டார். தஞ்சை -திருவையாறு பைபாஸ் சாலை 8.கரம்பை பகுதியில் சென்றபோது தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதற்காக தமிழரசன் தனது பைக்கை ஓரமாக நிறுத்தி உள்ளார்.
சுற்றி வளைத்து பணம் கேட்டு மிரட்டிய 5 பேர்
அப்போது அங்கு வந்த 5 பேர் தமிழரசன் மற்றும் அவரது காதலி சுற்றி வளைத்து மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதால் தமிழரசனும், அவரது காதலியும் அச்சமடைந்துள்ளனர். அப்போது தமிழரசன் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் வீட்டில் யாரிடமாவது இருந்து கூகுள் -பே மூலம் பணம் அனுப்பச்சொல்லு என்று மிரட்டி உள்ளனர். அந்த நபர்களின் மிரட்டல் அதிகரித்ததால் உயிருக்கு பயந்த தமிழரசனின் காதலி அவரது வீட்டில் சகோதரி மூலம் கூகுள் பே-லிருந்து ரூ.3000 அனுப்புமாறு கேட்டுள்ளார்.
கூகுள்பே-ல் பணம் வந்தது
தொடர்ந்து தமிழரசனின் கூகுள்-பேக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர்கள் பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தமிழரசன் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழரசன் மற்றும் அவரது காதலியை மிரட்டி பணம் பறித்தது தஞ்சை வடகால் மேலத்தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் பாபு என்கிற ஜெய் ஆகாஷ் (24), ரவி மகன் மணிகண்டன் (27), கீழத்தெரு வாசுதேவன் மகன் வல்லரசன் (21), மாதாகோவில் தெரு அடைக்கலசாமி மகன் சார்லஸ் (29), ரெட்டிப்பாளையம் மெயின்ரோடு பகுதியை பழனி மகன் விக்கி என்பது தெரிய வந்தது.
பணம் பறித்த 4 பேர் கைது
இதையடுத்து பாபு, மணிகண்டன், வல்லரசன், சார்லஸ் ஆகிய 4 பேரையும் கள்ளப்பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த காலம் போய் இப்போது கூகுள் பே வழியாக பணம் போட்டு விட கூறி பணம் பறிக்கும் காலமாக மாறிவிட்டது என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத்திற்கு இந்த புகார் குறித்து தகவல் சென்றவுடன் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வடகால் பகுதியை சேர்ந்த மேற்கண்ட 5 பேரும் குழுவாக இணைந்து பெண்களுடன் வருபவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சுற்றி வளைத்து மிரட்டி பணம் பறிப்பதை தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான விக்கியும் இன்னும் ஓரிருநாளில் சிக்கி விடுவான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.