தஞ்சாவூர்: கொல்கத்தாவில் மருத்துவ முதுகலை மருத்துவ மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மருத்துவ மாணவ, மாணவியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்


கொல்கத்தா ஆர்ஜிகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர் கல்லூரியில் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, கை, கால்,தொண்டை  சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர மரணத்தை கண்டித்து இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராடங்கள் நடத்தி வருகின்றனர்.


மெழுகுவர்த்தி ஏந்தி போராடும் மருத்துவர்கள்


தமிழ்நாடு அளவிலும் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பையும், போராடும் மருத்துவர்களுக்கு ஆதாரவையும் தெரிவித்தனர்.


மாணவர்கள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும்


இதில் மருத்துவர்கள் மட்டுமல்ல அனைத்து பெண்களின் மீதான அத்து மீறல்கள் தடுக்கப்பட வேண்டும், பாதுகாப்பு வேண்டும், மருத்துவ மாணவர்களுக்கு மாநில அளவில் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும், கொல்கத்தாவில் மாணவர்கள் மீதான காவல் வன்முறை தடுக்கப்பட வேண்டும், மருத்துவர்கள் பாதுகாப்புக்கு தற்போது சட்டங்கள் இருந்தாலும் கூடுதல் அதிகாரம் அளிக்கின்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்.


கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதுகலை பயிற்சி மருத்துவர் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற அட்டைகளை கையில் ஏந்தி மாணவ மாணவிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


கொல்கத்தாவில் நடந்த போராட்டம்


கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகாலையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் டாக்டர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் போது கொல்கத்தாவில் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் சூறையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதில் 15 போலீஸார் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தவர்களின் படங்களை அடையாளம் கண்டு அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். அதன் அடிப்படையில் அடுத்த சில மணி நேரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


இவ்வழக்கை சி.பி.ஐ.கையில் எடுத்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ சம்பவம் நடந்த தினத்தன்று பணியில் இருந்த 8 டாக்டர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. அதோடு கொலை செய்யப்பட்ட டாக்டருடன் அன்று இரவு பணியாற்றிய 3 பேரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ அதிகாரிகள் மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு நடத்தினர்.


மருத்துவமனை சூறையாடப்பட்ட போது, கொலை நடந்த செமினார் ஹாலுக்குள் போராட்டக்காரர்கள் சென்றிருந்தனரா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர். ஆளுநர் ஆனந்த் போஸும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து டாக்டர்ளும், செவிலியர்களும் கொல்கத்தா மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் நாடு முழுவரும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். முக்கியமாக பணி புறக்கணிப்பும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.