தஞ்சாவூர்: தஞ்சையில் செல்போனை வாலிபரிடம் இருந்து பறிக்கும் போது அவர் விடாமல் சட்டையை கோர்த்து பிடித்து மல்லுக்கட்டு நடத்த, துண்டை காணோம் டி சர்ட்டை காணோம் என்று டி சர்ட்டை கழற்றி விட்டு எஸ்கேப் ஆன செல்போன் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுப்பதற்கு முன்பே போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நடந்துக்கிட்டே செல்போன் பார்தது வந்தது தப்பா?
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே ஒரு சந்தில் அன்வர் என்பவர் தனது செல்போனை கையில் வைத்து கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த இருவர் அன்வர் அருகில் வந்து நிறுத்தினர். பைக்கை ஓட்டி வந்த வாலிபர் பைக்கிலிருந்து இறங்கி அன்வர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தார். மற்றொரு வாலிபர் பைக்கை ரெடியாக வைத்திருப்பதை கண்ட அன்வர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு தன்னிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபரின் டி ஷர்டை இழுத்து பிடிக்க இருவரும் மல்லுக்கட்டினர்.
பிடியை விடாமல் திருடனை இழுத்து பிடித்தார்
இருப்பினும் அன்வர் தன் பிடியை விடாமல் பிடித்து இழுக்கவே சட்டென்று செல்போனை பறித்த வாலிபர் தன் டீ சர்ட்டை கழற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவங்கள் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த மல்லுக்கட்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தங்களின் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து விசாரணை
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வண்டி எண்ணை வைத்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்க, இக்குற்றச் செயலில் ஈடுபட்டது மேலவீதியை சேர்ந்த பிரவீன் (24) மற்றும் வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலாஜி (29) என்று தெரிய வந்தது. இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அன்வரின் செல்போன் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவான பிரவீனை போலீசார் தேடிவருகின்றனர்.
புகார் வருவதற்கு முன்பே நடவடிக்கை
இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் செல்போனை பறி கொடுத்த அன்வர் புகார் கொடுப்பதற்கு முன்பே தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட தஞ்சை நகர டி.எஸ்.பி., சோமசுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீசாரை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் வெகுவாக பாராட்டினர்.