தஞ்சாவூர்: தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நகர் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மேற்பார்வையில் தஞ்சை மாநகராட்சிக்குபட்பட்ட கீழவாசல், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வளர்கள், பணி மேற்பார்வையளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


இதில் 45-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 4 டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி வாகனங்களில் ஏற்றப்பட்டு ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 700 அபராதமாக வசூலிக்கப்பட்டது.


‘பிளாஸ்டிக்’ பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து பாலிப்ரொப்பிலீன் பைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல பிளாஸ்டிக் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன.


அந்த மனுக்களில், 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவினால், எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த வழக்குகளை நீதிபதிகள் விசாரித்து தமிழக அரசின் இந்த தடை உத்தரவு மூலம் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதையோ, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதையோ ஏற்க முடியாது.


முதலில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு சுத்தமான குடிநீர், மாசு இல்லாத காற்று கிடைக்கவேண்டும். பொதுமக்களின் நலன் கருதியே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் தான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் நோக்கம் நூறு சதவீதம் நிறைவேறும்.


பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அரசு அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சந்தையில் எளிதாக கிடைத்தால், தமிழக அரசின் இந்த தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாகவே இருக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பெரும் தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், தடை உத்தரவே அர்த்தமற்றதாகி விடும்.


அறிவியல் ஆய்வுகளின் படி பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் மக்குவதற்கு 100 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது. அந்த பிளாஸ்டிக் பைகளை மாடுகள் போன்ற கால்நடைகள் சாப்பிடுவதால், அவை பலியாகுகின்றன. எனவே, இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்கிற பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும்.


ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அபாயகரமாக இருந்ததால் தான், மாநில அரசும், இயற்கை ஆர்வலர்களும் விழித்துக்கொண்டனர். அதன் விளைவாக இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. எனவே, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியதும் குறிப்பிடத்தக்கது.