தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் கடந்த ஞாயிறு அன்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக தொழிலதிபர் அவரது மகன் கண் முன்பே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். 


திருவாரூர் தொழிலதிபர் தஞ்சையில் கொலை
 
திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்தவர் பாபு (48). தொழிலதிபர். திமுக பிரமுகர். இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவர் தஞ்சாவூரில் உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில்  பங்கேற்பதற்காக காரில் தனது மகன் பாலாவுடன் திருவாரூரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.


மொய் கவர் வாங்க இறங்கிய மகன்


தஞ்சாவூருக்கு வந்த அவர் ஞானம் நகர் பகுதியில் ஒரு கடை அருகில் காரை நிறுத்திவிட்டு  பாலா மட்டும் இறங்கி சென்று மொய் கவர் வாங்கினார். பின்னர் பாலா மீண்டும் காரில் ஏறியபோது எதிரே வந்த கார் பாபுவின் காரை வழி மறித்து நின்றுள்ளது. மேலும் காரில் இருந்தவர்கள் சத்தமாக ஹாரனை அலற விட்டுள்ளனர். 


சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்


இதனால் தன் காரை விட்டு பாபு இறங்கி அந்த காரை நோக்கி சென்றுள்ளார்.  அப்போது வழிமறித்து நின்ற காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் பாபுவை சரமாரியாக அவரது மகன் பாலா கண் முன்பு வெட்டினர். இதில் படுகாயமடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் அலறிக் கொண்டே சாலையில் சரிந்து விழுந்தார். தனது தந்தை பாபுவின் கண்டு பாலா அலறி துடித்துள்ளார். போக்குவரத்து மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பாபுவை வெட்டிய அந்த நபர்கள் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


போலீசார் தீவிர விசாரணை


தகவலறிந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆசிஷ் ராவத், ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பிக்கள் நித்யா, ராஜா மற்றும் போலீசார் உடன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொழில் போட்டி காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் செய்திருப்பதும், அதன் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் உறவினர்களுக்குள் ஏதாவது பிரச்சினையா என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. தொடர்ந்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


மூன்று பேர் கைது


இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் தொழில் போட்டிதான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய தஞ்சையை சேர்ந்த முருகேசன் (58),  சிவக்குமார் (47), கணேசன் (48) ஆகிய 3 பேரையும் நேற்று இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.