கடத்தப்பட்ட 5 மாத குழந்தை: இரண்டே மணிநேரத்தில் மீட்ட போலீசார்: எப்படி? குவியும் பாராட்டு!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அதிகாலையில் பெற்றோருடன் பாதுகாப்பில் தூங்கி கொண்டிருந்த 5 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அதிகாலையில் பெற்றோருடன் பாதுகாப்பில் தூங்கி கொண்டிருந்த 5 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் குழந்தை கடத்தப்பட்ட சில மணி நேரத்திலேயே போலீசார் விரைவாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.

Continues below advertisement

மிக முக்கியமான பகுதியான பூதலூர்

தஞ்சை மாவட்ட பூதலூர் மிகவும் முக்கியமான பகுதியாகும். சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளது. பூதலூரில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. ரயிலில் வரும் சுற்றுலாப்பயணிகள் பூதலூர் வழியாக பிரபலமான பூண்டி புதுமை மாதா ஆலயத்திற்கு செல்வது வழக்கம். இதனால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். 

ஆந்திர தம்பதியின் குழந்தை மணிகண்டா

இந்த பூதலூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப், அவரது மனைவி ஷோபா ஆகியோர் தங்களின் 5 மாத குழந்தை மணிகண்டாவுடன் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இதே ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பார்மில் படுத்து உறங்குவது வழக்கம். பின்னர் காலையில் எழுந்து வழக்கம் போல் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வந்தனர்.

குழந்தையை காணாமல் பெற்றோர் அதிர்ச்சி

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டேஷனில் பிளாட்பார்மில் படுத்து உறங்கினர். அருகில் தங்களின் குழந்தை மணிகண்டாவையும் படுக்க வைத்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 3: 30 மணியளவில் ஷோபா எழுந்து பார்த்தபோது அருகில் படுக்க வைத்திருந்த மணிகண்டாவை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் தனது கணவர் திலீப்பை எழுப்பி விபரம் சொல்லியுள்ளார். இதையடுத்து இருவரும் ரயில்வே ஸ்டேஷனில் பல பகுதிகளில் அழுது கொண்டே குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் குழந்தை எங்குமே காணவில்லை.

பூதலூர் போலீசில் புகார்

அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காதால் உடனடியாக இதுகுறித்து பூதலூர் போலீசில் திலீப் புகார் தெரிவித்தார். உடன் சம்பவ இடத்திற்கு பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சரவணன், தனசேகரன், தியானேஸ்வரன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பல பகுதிகளுக்கும் சென்று பூதலூர் போலீசார் குழந்தையை தேடி பார்த்தனர். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் பல இடங்களிலும் தேடி பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மேற்கு பகுதியில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. 

2 மணிநேரத்தில் குழந்தை மீட்பு

உடன் அந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சென்று பார்க்கும் பொழுது குழந்தை அங்கு கிடந்துள்ளது தெரிய வந்தது. ஆனால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் காலை 6 மணி அளவில் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை அந்த பகுதிக்கு யார் தூக்கி சென்றது. ஏன் இதை செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் செய்தார்களா? 

திலீப்- ஷோபாவை பிடிக்காதவர்கள் யாராவது கோபத்தில் இதுபோன்று செய்தார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரத்திலேயே கடத்தப்பட்ட குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பூதலூர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola