தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான இரண்டு கடைகளை மிகக் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து அக்கடைகளை வேறு இரு நபர்களுக்கு அதிக தொகைக்கு உள் வாடகைக்கு விட்டு, அதன் மூலம் மாநகராட்சிக்கு 17 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக திமுக முன்னாள் கவுன்சிலரின் சகோதரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.


தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறி வந்தது. அதன் பிறகு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார், பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது  அனைத்து ஊழியர்களும், மாநகராட்சியின் அவலம் குறித்து, ஆணையர் சரவணகுமாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்திலுள்ள ஒரு கடைக்கு, சாதாரண மக்கள் போல் சென்று, அக்கடையில் பொருட்களை வாங்கி கொண்டு, கடையின் உரிமையாளரிடம், விசாரித்தார். ஆணையர் தான் வந்துள்ளார் என்று தெரியாத அக்கடையின் உரிமையாளர், இங்குள்ள கடைகளில், 10 ஆயிரம் முதல் 12 ஆயிரத்திற்கு மேல் வாடகை தருவதாகவும், அதுவும், தஞ்சாவூரிலுள்ள கட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், இக்கடையை, மாநகராட்சியிடம், குறைந்த தொகை வாடகைக்கு எடுத்து, எங்களிடம் அதிக தொகைக்கு கடையை உள்வாடகைக்கு விட்டுள்ளனர் என வெகுளித்தனமாக தெரிவித்தார்.




அதனை தொடர்ந்து, ஆணையர், அக்கடையின் வாடகை வந்துள்ளதா என, அனைத்தையும் விசாரித்தார். அதன் பின்னர், அதிரடியாக அனைத்து கடைகளையும் அதிக விலைக்கு, பல்வேறு நிபந்தனைகளுடன், ஆளுங்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கிடையே ஏலம் விட்டார். இதனால் தஞ்சாவூரில், வணிகர்கள், திமுகவினர் என அனைத்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆணையர் எதற்கும் அஞ்சாமல், கடைகளை ஏலம் விட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தொகை அனைத்தையும் வழங்கினார். இந்நிலையில், திமுக முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.நாகராஜின் சகோதரர் தஞ்சாவூர் அருளானந்தம் நகரைச் சேர்ந்த ஆர்.கே.மணி (55). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான 2 கடைகளை கடந்த 2001 ஆம் ஆண்டு முறையே 3,500 மற்றும் 4,000 என மாத வாடகைக்கு எடுத்துள்ளார். அதன் பின்னர் அவ்விரு கடைகளையும் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு மாத வாடகையாக முறையே 10,500 மற்றும் 8,000 என உள் வாடகைக்கு விட்டுள்ளார். இதன் மூலம் ஆர்.கே.மணி தஞ்சை மாநகராட்சிக்கு சுமார் 17 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.




இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில், மாநகராட்சி வருவாய் அலுவலர் அசோகன் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி மனோகரன் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.கே.மணி மீது நம்பிக்கை மோசடி செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் ஆர்.கே.மணி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆர்.கே.மணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால், திமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.