ஒரே இடத்தில் பல மலர் தோட்டங்களை பார்த்தால் மனம் எப்படி குதூகலிக்கும். அப்படிப்பட்ட உணர்வை பல வெற்றியாளர்களை, பதக்கங்களை குவித்த, சான்றிதழ்களை பெற்ற, வெற்றிக் கோப்பைகளை வசப்படுத்திய மாணவ, மாணவிகள் என்ற பெரும் மலர் தோட்டத்தை பார்த்தால்... பார்க்கலாம். ஆமாங்க. இருக்காங்க.
பள்ளியில் விளையாட்டில் ஜெயித்த மாணவ, மாணவிகள் இருப்பார்கள். ஆனால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் இயங்கி வரும் (நீலகிரி) மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் வெற்றிப்பெற்ற மாணவர்களை வைத்தே ஒரு பள்ளி நடத்தலாம் போல் இருக்கிறது.
நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள். பின் தயக்கம் கூடாது. வாழ்க்கை என்ற பரந்த குடை, பல, பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை. நாம் வாழ ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். நம்மை வீழ்த்தும் அளவிற்கு தடைகள் இருந்தாலும் அவற்றையும் வீழ்த்தும் கருவி உன்னிடம் உள்ள விடாமுயற்சி, திறமை, தன்னம்பிக்கைதான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்தவர்கள் ஒன்று கூடி உள்ள பள்ளிதான் இந்த பள்ளி என்றால் மிகையில்லை.
தனியார் பள்ளிகளை விட இன்று அரசுப்பள்ளிகள் நிகழ்த்தும் சாதனைகள் இமயம் போல் உயர்ந்துக் கொண்டே வருகிறது. தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியும் இமயம் தொடும் அளவிற்கு சாதனைகளின் கொடியை பறக்க விடுகிறது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். வெற்றியை சொல்லி அடிக்கின்றனர். என்ன போட்டியில் பங்கேற்கவில்லை. பேச்சு, ஓவியம், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், தடை தாண்டி ஓடுதல், ரிலே, குண்டு எறிதல், மராத்தான் ஓட்டம், செஸ் போட்டி, மாடலிங் போட்டி, நடனம், கராத்தே, சிலம்பம் இப்படி... இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். வகுப்பிற்கு குறைந்தது 10 மாணவர்கள் இப்படி வெற்றியாளர்களாக திகழ்கின்றனர். இவர்களை பார்த்து அடுத்தடுத்த மாணவர்களும் சாதிக்க வேண்டும் என்று உவகை கொண்டு போட்டியில் பங்கேற்கின்றனர். வெற்றியும் பெறுகின்றனர்.
வறுமைக்கு பின் வரும் செல்வமும், துன்பத்திற்கு பின் வரும் இன்பமும் தோல்விக்கு பின் வரும் வெற்றியும் நிலைத்து நிற்கும். காரணம் தோல்விகள் உன்னை செதுக்கி இருக்கும். செம்மைப்படுத்தி இருக்கும். அதனால் வெற்றி என்ன கிரீடம் வந்தாலும் ஆணவம் என்ன ஆயுதம் உன்னிடம் இருக்காது.
இதுதான் இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் தன்னம்பிக்கை என்ற வார்த்தைகள் போலும். சொல்லி அடிக்கின்றனர் கில்லியாக. மண்டலம், மாவட்டம், மாநிலம் என்று விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதிக்கின்றனர்
எத்தனை எத்தனை பேரை பெயர் சொல்வது. நேற்று இந்த 6ம் வகுப்பு மாணவர்கள் என்றால், நாளை 7ம் வகுப்பு மாணவர்கள், அடுத்த நாள் அடுத்த வகுப்பு இப்படி தொடர்ந்து பள்ளிக்கு பெருமையை சேர்த்து வரும் இப்பள்ளி மாணவர்களால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உவகை அடைந்து வருகின்றனர். யாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று வெற்றி சிம்பிள் காட்டும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் மட்டுமில்லை. படிப்பிலும் அட்டகாசமாக மிளர்கின்றனர். மாநகராட்சி பள்ளியா என்று உதாசீனப்படுத்தியவர்கள் கூட இன்று இந்த பள்ளி மாணவ, மாணவிகளின் வெற்றியின் உச்சத்தை கண்டு மிரள்கின்றனர்.
விளையாட்டு போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளுக்கு இம்மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம், ஆசிரியை அங்கையர்கன்னி ஆகியோர் விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களின் சிறப்பான பயிற்சியால் மாணவ, மாணவிகள் வெற்றியை குவிப்பது கண்கூடாக தெரிகிறது. தனியார் பள்ளிகளை மிஞ்சி, அனைத்திலும் முன்னிலை பெற்று வரும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ப.மூர்த்தி கூறுகையில், இப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய நேரத்தில் கண்டிப்பும், கனிவாக நடக்க வேண்டிய நேரத்தில் கனிவும் காட்டுகின்றனர்.
இதனால் படிப்பு, விளையாட்டு, தனித்திறமைகள் என்று எம் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றிக்கனியை பறித்து கொண்டு வந்து குவிக்கின்றனர். இவர்களின் வெற்றிகள் அரசு பள்ளிகளின் புகழை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்வோம். அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெறுகின்றனர். இதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.