தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இந்த போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களை கைது செய்யவும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.



இதற்காக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கந்தசாமி, கண்ணன், தலைமை காவலர் இளையராஜா, காவலர்கள் சுந்தர்ராமன், ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினர் தஞ்சாவூர் சரக பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கஞ்சா மற்றும் குட்கா, பான்  மசாலா விற்பனை செய்து வருபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடத்தி வரப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் இறங்கினர். அந்த வகையில் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதிநகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 2 கார்கள் அடுத்தடுத்து அந்த வழியாக வேகமாக வந்தது. அந்த 2 கார்களையும் தனிப்படையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது கார்களின் பின்பகுதியில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தஞ்சாவூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த த.ராஜேஷ் (30), கருணாவதிநகரை சேர்ந்த ஜெ.பிரகாஷ்(31), ஞானம் நகர் வே.அசோக்(33) கும்பகோணத்தை சேர்ந்த கா.துளசிராமன் (41), திருவாரூர் அச்சுதமங்கலம் செ.கார்த்தி (21) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தியபோது, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதிநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குட்காவை பதுக்கி வைத்து பெட்டிக்கடைகளில் சில்லரை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கார்கள் மூலம் குட்காவை கடத்தி வந்த 5 பேரை கைது செய்த தனிப்படையினரை தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி பாராட்டினார். தனிப்படையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.