மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவரின் மகன் 17 வயதான லோகேஸ்வரன். இவர் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இன்று கல்லூரிக்கு சென்று விட்டு தேர்வெழுதி முடித்து விட்டு தனது நண்பருடைய ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது கல்லூரி வாயிலில் நின்று கொண்டிருந்த சக நண்பர்களான கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோரை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையை நோக்கி சென்று கொண்டிருந்தார். மன்னம்பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவே நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அருகில் இருந்து கோயில் கேட்டை உடைத்து உள்ளே சென்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த லோகேஸ்வரன் கோயிலின் உள்ளே சுவற்றில் மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த லோகேஸ்வரனின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த சக நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய நாயும் உயிரிழந்துள்ளது.
இதேபோன்று சீர்காழியில் நடந்த மற்றொரு விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு.
சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்கா தெருவில் கூரை வீட்டில் வசித்து வந்தவர் 80 வயதான ருக்மணி. இவரது கூரை வீட்டின் சுவரானது சீர்காழி சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுவர் சேதமடைந்து இருந்தது. இந்நிலையில் வழக்கம்போல் ருக்மணி வீட்டில் உள்ள கட்டிலில் உறங்கி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேதம் அடைந்திருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் முழுவதுமாக இடிந்து வீட்டின் உள்ளே விழுந்ததுள்ளது.
சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே கட்டிலில் உறங்கி கொண்டிருந்த ருக்மணி மீது விழுந்ததால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று காலை அவரது மகள் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்து கதவை திறந்த போதுதான் உள்ளே சுவர் இடிந்து விழுந்து தனது தாய் இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உதவியுடன் சுவற்றை அகற்றி ருக்மணியின் உடலை மீட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.