தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு மீட்புப்பணி உபகரணங்களை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தயார் நிலையில் தீயணைப்பு மீட்புப்பணி உபகரணங்களை வைத்திருந்தது.
பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆப்தமித்ரா நிதியின் மூலம் மோட்டாருடன் கூடிய ஒரு பைபர் படகு, 32 லைப் ஜாக்கெட், 12 சோலார் டார்ச் லைட், பாதுகாப்பு கையுறை 12 ஜோடிகள், 6 நைலான் கயிறு, 30 மீட்டர் 20 நைலான் கயிறு 130 அடி, 20 லைப் பாய், 30 தீயணைப்பான் கருவிகள், 6 ஸ்ட்ரெச்சர், 16 பாதுகாப்பு கண்ணாடிகள், 4 நீட்டிப்பு ஏணிகள் (15 அடி முதல் 26 அடி), 2 ஏணிகள் (15 அடி), 4 ஜெயின் ஷா, 1 ஃபைபர் படகு மற்றும் 40 Hp OBM மோட்டர், 10 பாம்பு பிடிக்கும் கருவி , 20 Half Face mask, 8 Wakie Talkie உள்பட ரூ.20,00,000 மதிப்புள்ள மீட்புப்பணி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் உபயோகத்திற்காக தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பாக தஞ்சாவூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் குமாரிடம் இவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், தஞ்சாவூர் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முருகேசன், கும்பகோணம் நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை நிலைய அலுவலர் செல்வம், தஞ்சாவூர் நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அழகேசன், நிலைய அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உதவி தணிக்கை அதிகாரி பணி காலியிடம்
இதேபோல் ஸ்டாப் செலக்சன் கமிஷனானது தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தர நிலை தேர்வு வாயிலாக மத்திய அரசில் குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' பிரிவில் உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி போன்ற பணிக்காலியிடங்கள் உட்பட 14582 காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் எழுத்துத்தேர்வு வாயிலாக நிரப்ப வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியுடைய இளைஞர்கள் வரும் 04.07.2025 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். கணினி வழியாக முதல் கட்ட தேர்வானது ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு குறித்த முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.
எனவே, மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்காக தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நாளை 25ம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் 04362 237037 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வதோடு, கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.