கும்பகோணம் - ஜெயங்கொண்டம் 4 வழிச்சாலை ; Kumbakonam - Jayankondam 4-Lane Road
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் Kumbakonam மற்றும் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் பகுதிக்கு இடையே கொள்ளிடம் ஆறு பாய்ந்தோடுகிறது. கும்பகோணம் மற்றும் ஜெயங்கொண்டம், தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களாக மாறியுள்ள பகுதிகளாகும். இந்த 4 வழிச் சாலையின் திட்டம், இந்த இரண்டு நகரங்களுக்கிடையில் போக்குவரத்தை எளிதாக்குவதற்கும், வர்த்தக மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவுவதற்கும் உருவாக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் முன்பு கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அணைக்கரை கீழணை பாலத்தை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சுமார் 2 கி.மீ நீளமுள்ள நீலத்தநல்லூர் - மதனத்தூர் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் மூலம் கும்பகோணம் - ஜெயங்கொண்டம் பகுதிகளுக்கு இடையிலான பயணங்கள் அதிகரித்துள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியில் சில கல்லூரிகளே இருந்த நிலையில், கும்பகோணத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எளிமையாக சென்று வருகின்றனர். விவசாயிகளும் இந்த பாலத்தை பயன்படுத்தி எளிமையாக மற்ற டெல்டா பகுதிகளுக்கு பயணம் செய்து விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய முடிந்தது.
கும்பகோணம் செல்ல 45 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய சூழல்
ஜெயங்கொண்டத்தில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் (Kumbakonam) செல்ல 45 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய சூழலில் இந்த பாலம் மூலமாக அது 31 கிலோமீட்டர் குறைந்தது. ஆனால், பால வசதி ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் இந்த சாலை இருவழிச் சாலையாக குறுகியதாகவே உள்ளது. குறிப்பாக நீலத்தநல்லூர் முதல் அசூர் பைபாஸ் வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
கும்பகோணம் - ஜெயங்கொண்டம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தனர் . கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரையிலான இருவழிப் பாதையை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தக் கோரி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜெயங்கொண்டம் - மதனத்தூர் இடையேயான 18 கி.மீ நீளமுள்ள சாலையும், மதனத்தூர் - கும்பகோணம் இடையேயான 12 கி.மீ நீளமுள்ள சாலையையும் விரிவுபடுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தமிழ்நாடு சாலைத் துறை திட்டத்தின் (TNRSP) கீழ் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும்” என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அசூர் - நீலத்தநல்லூர் இடையே சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. TNRSP திட்டத்தின் கீழ் கும்பகோணம் - ஜெயங்கொண்டம் இடையேயான மதனத்தூர் வழி சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் விரைவில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசூர் - கடிச்சம்பாடி வரை 3 கி.மீ தூரத்திற்கு தற்போது சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க ரூ. 7 கோடி நிதி
இதனிடையே கும்பகோணம் மாநகரிலிருந்து நீலத்தநல்லூர் வரையிலான கொள்ளிடம் கரைச்சாலையில் அசூர்-கடிச்சம்பாடி சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை அகலப்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தல்கள் எழுந்தன. அதன்படி, முதற்கட்டமாக அசூர் - கடிச்சம்பாடி வரை 3 கி.மீ தூரத்திற்கு தற்போது சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது 80 சதவீதப்பணிகள் நிறைவடைந்து, இந்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதன்பின் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டாம் கட்டப்பணிகள் ,மூன்றாம் கட்டப்பணிகள் நடைபெறும் என்று சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தெரிவித்துள்ளார்.