தஞ்சாவூர்: மிகப் பழமை வாய்ந்த தஞ்சாவூர் சிங்கப்பெருமாள் கோயில் குளம் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டையுடன் உள்ளது இதை உடன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சையில் அமைந்துள்ளது மிக பழமையான சிங்கப்பெருமாள் குளம். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்ப்பிற்காக ஏலம் விடப்படு முறையான பராமரிப்போடு இருந்தது. கோடைகாலம் ஆனாலும் வற்றாமல் எப்போதும் தண்ணீர் இந்த சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது மீன் வளர்ப்பு ஏதும் நடைபெறாததால் இக்குளம் தொடர்ந்து பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. முக்கியமாக இப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் குளத்தில் அதிகளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தக் குளத்தின் தெற்கு கரையில் வசிக்கும் ஒரு சிலரால் சிங்கப்பெருமாள் குளத்தில் நேரடியாக கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
கழிவு நீரை கலந்து விடுவதற்காகவே கல்லணை கால்வாயில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை அடைத்து விட்டு புதியதாக வீட்டிலிருந்து நேரடியாக குளத்திற்கு கழிவு நீர் செல்வதற்கு குழாய் அமைத்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் இக்குளத்தை வீட்டு கழிவு நீர் செல்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறு சிலர் செய்யும் செயல்களால் குளம் முழுவதும் கழிவுநீர் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளது என்று அப்பகுதி சேர்ந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் ஏராளமான குழந்தைகளும் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள் இந்த குளக்கரை பகுதியில் விளையாடுவதும் வழக்கம்.
தற்போது குப்பைகளாலும், கழிவுகளாலும் சுகாதார சீர்கேட்டுடன் குளம் உள்ளதால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் வயதானவர்களும் வசித்து வருகின்றனர். எனவே பழம்பெருமை வாய்ந்த இந்த குளத்தில் குப்பைகள் கொட்டுவதையும் கழிவுநீர் கலக்க விடுவதையும் தடுத்து நிறுத்தி குளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “ஒரு சிலர் செய்யும் தவறால் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் இந்த பழம் பெருமை வாய்ந்த குளம் தற்போது சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதை சீரமைத்து கரைகளை பலப்படுத்த வேண்டும். தேவையான இடத்தில் கரைப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்தால் குளம் இன்னும் பெருமை மிகுந்ததாக மாறும்” என்றனர்.