தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ராஜராஜன் நகரை சேரந்தவர் ஆனந்தன் (35). என்ஜினீயரான இவர் தன்னுடைய பெயரிலும், தனது தாயார் பெயரிலும் உள்ள மூன்று மனைகளை வரன்முறைப்படுத்த தஞ்சை பனகல் கட்டிடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் கொடுத்திருந்தார். இந்த விண்ணப்பத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை ஆணையராகவும், அலுவலக மேலாளராகவும் பணியாற்றும் சாமிநாதன் (55) என்பவர் பரிசீலனை செய்தார். அப்போது சாமிநாதன், மனையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது, இதனை சீர் செய்து, மனைகளை வரன்முறைப்படுத்த வேண்டுமானால், ஒரு மனைக்கு 3 ஆயிரம் வீதம், மூன்று மனைக்கு 9 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். என்ஜினியர் ஆனந்தன், லஞ்சம் அதிகமாக கேட்கின்றீர்கள், கொஞ்சம் குறைத்து கேளுங்கள், அதனை தருகிறேன் என்றார். இதற்கு அதிகாரி சாமிநாதன் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் தினந்தோறும் அலைகழித்த நிலையில், வேறு வழியில்லாமல் இருந்தார்.
இதனால் மனவேதனையடைந்த ஆனந்தன், தனது மனைக்கு வரன்முறைப்படுத்த, நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று, ஆனந்தனுக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லாததால், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளிக்க முடிவு செய்தார். அதன்படி, ஆனந்தன், தஞ்சை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின்படி, போலீசார் ரசாயன தடவிய பணத்தை கொடுத்தனர். இதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் சாமிநாதன் கேட்ட 9 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஆனந்தன் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு அலுவலகத்தில் இருந்த சாமிநாதனிடம், ஆனந்தன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன தடவிய பணத்தை கொடுத்தார். அதனை சாமிநாதன் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த தஞ்சை லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் சாமிநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதால், கையும் களவுமாக பிடிபட்டார்.
பொது மக்கள் வீட்டுமனைகளை, கடன்களை வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் வாங்கி விட்டு, அதிகாரிகள் பல்வேறு குளறுபடிகள், பிரச்சனைகள் உள்ளது என அலைகழித்து, அவர்களிடம், கை நிறைய சம்பளம் வாங்கும் அதிகாரிகள், லஞ்சம் வாங்குவது மிகவும் வேதனையான செயலாகும். இது போன்ற அதிகாரிகளை, பணி நீக்கம் செய்து, வேறு எந்த அதிகாரியும், இனி வருங்காலத்தில், லஞ்சம் வாங்காதவாறு, உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.