தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பில் நேரடி நெல் கொள்முதல் பெரு நிலையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அரசு கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் கட்டப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்குள்ள பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


டெல்டா மாவட்டங்களில், கடந்த காலங்களில் நெல் மழையில் நனையும் பிரச்சனை இருந்தது. இதற்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் மேற்கூரை, கான்கீரிட் தளத்துடன் கூடிய செமி குடோன் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 213 இடங்களில், தலா 2.86 லட்சம் ரூபாய் மதிப்பில், செமி குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது.



தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் மெ.டன், சென்னம்பட்டியில் 2,500 மெ.டன் மற்றும் பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடியில் 6 ஆயிரம் மெ.டன் என மொத்தமாக 58,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்றன. இதனை தமிழ்நாடு முதல்வர்  காணொலி மூலமாக திறந்து வைத்தார்.


இதுகுறித்து அறிந்த இந்திய உணவு கழக நிர்வாக இயக்குநர் மீனா, செமி குடோன் திட்டம் சிறப்பாக உள்ளது. இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, திட்டத்தின் செயல் வடிவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.  
தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டையில் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 1 கோடி ரூபாயில், பரிட்சார்த்த முறையில் தொழிலாளர்களின் சுமையை குறைக்கும் வகையில், முழுவதுமாக இயந்திரங்கள் கொண்டு, நாளொன்றுக்கு 400 மெ.டன் அளவுக்கு நெல்லை கொள்முதல் செய்து, அதனை மூட்டைகளில் தைத்து அடுக்கும் வகையில் நேரடி நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில், நெல்லை தூற்றுவதில் இருந்து சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்புவது போன்றவற்றை ஆட்டோமேட்டிக் முறையில் செய்யும் வகையில், முயற்சி செய்ய உள்ளோம்.


இந்த திட்டம் வெற்றி பெற்று விட்டால், தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேட்டூர் அணை கடந்த ஆண்டு மே.24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டத்தால், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு 2.31 லட்சம் டன் அளவுக்கு கூடுதலாக, நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 35.73 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 35,941 ரேஷன் கடைகள் உள்ளது. அதில், பொதுமக்களுக்கு தரமான அரிசி கிடைப்பதற்கும், ரேஷன் கடைகளை சிறப்பாக மாற்றுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில், 5,584 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 5 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ.,தரச்சான்று பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறது.


கூட்டுறவு துறை மூலமாக வேளாண்மை கடனாக 17.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி கடந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை கடனாக இல்லாமல் கால்நடை கடன் மற்றும் நகை கடன் உட்பட 17 வகை கடன் வழங்குகிறோம். இந்த வகையில், 82.15 லட்சம் பேருக்கு 68,495 கோடி ரூபாய் கடனாக கடந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் ஒன்றான ராகிக்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மற்ற சிறுதானியங்களை கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, 140 கூட்டுறவு துறைக்கு சொந்தமான கடைகளில், நேரடியாக குறைந்த விலையில், விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


 ரேஷன் கடைகளில் இரட்டை முறை பதிவை குறைக்க கடந்த பிப்ரவரி மாதம், தொழில்நுட்ப நிபுணர்களுடன் பேசி, கருவிழி, கை ரேகை இரண்டும் செயல்படும் புதிய இயந்திரங்களை ரேஷன் கடைகளுக்கு விரைவில் வழங்க உள்ளோம் என்றார்.


ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் எஸ்.பிரபாகரன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, முதுநிலை மண்டல மேலாளர் என்.உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.