காட்டாற்று வெள்ளத்திற்கு தடை போட இயலுமா. வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்ட பாதையில் சரியாக நடந்தால் தோல்விதான் வழி தவறி போகும் என்பதை மெய்ப்பித்து தான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் படிப்பும், விளையாட்டும் என் இரு கண்கள். இதில் வெற்றி என்பதே என் இலக்காக இருக்க வேண்டும் என்று கை ஜாடையில் தெரிவிக்கிறார் தஞ்சை மாவட்டம் குறிச்சி மலையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சாமுண்டீஸ்வரி (17).



தந்தை பாலகிருஷ்ணன், தாய் தனலெட்சுமி. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இதில் சாமுண்டீஸ்வரிக்கு சரியாக பேச்சு வராது. காதும் கேட்காது. என்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றிகள் என்னை பற்றி பேசும் என்று உள்ளத்தில் உறுதியோடு, தன்னம்பிக்கை பலத்தோடு வெற்றி சிகரத்தில் ஏறி 6 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். இந்த சிங்கப்பெண். உடன் பிறந்தவர்கள் அண்ணன் 3 பேர், தங்கை ஒருவர்.





படிப்பது தஞ்சை மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு. படிப்பிலும் கெட்டி... விளையாட்டிலும் சுட்டியாக ஓட்டம், குண்டு எறிதல், கபாடி என்று கலக்கி எடுக்கும் மாணவி சாமுண்டீஸ்வரி... முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து பங்கேற்கும் போட்டிகளில் தோல்விகள் அடைந்தாலும் வெற்றிதான் குறிக்கோள், பதக்கம் வெல்வதே எனது எண்ணம் என்று சாதித்து காட்டி உள்ளார். இவரது வெற்றிப்பாதைக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகிறார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனைவர் முருகேசன். நெருப்பு பட்டால் பட்டென்று தெறிக்கும் பட்டாசு போல் ஓட்டத்தில் காற்றை மிஞ்சும் வேகத்திலும், குண்டு எறிதலில் துடிப்பாகவும் உள்ளார் சாமுண்டீஸ்வரி. சரி இவர் எத்தனை பதக்கங்கள் பெற்றார் என்று பார்ப்போமா...!

கடந்த 7.7.2018 அன்று மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தேசிய அளவிலான தேர்வு போட்டியில் 4ஒ100 தொடர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று தன் திரும்பி பார்க்க வைத்தவர், 22.12.2018ல் நடந்த போட்டி 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மறுபடியும் தங்கம் வென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். மேலும் கபாடி போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வா என் பக்கம் என்று இழுத்துக் கொண்டார்.

மாநில அளவில் மயிலாடுதுறையில் 11.10.209ல் நடந்த 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளி, குண்டு எறிதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெள்ளி, பேட்மிண்டன் போட்டியில் தங்கம் பெற்று அசத்தினார். இதோடு மட்டுமில்லை இன்னும் இருக்கு என்று வாலிபாலில் வெள்ளிப்பதக்கமும் வென்று சிங்கப்பெண்ணாக மாறினார்.





தொடர்ந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டிகளில் 4 100 ரிலே போட்டியில் வெள்ளியை தனதாக்கியவர் 25.2.2020ல் தஞ்சை அன்னை சத்யா ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கம், கபாடியில் தங்கப்பதக்கம் பெற்று அசத்தல் மாணவியாக மாறினார். 28.4.2022ல் தஞ்சையில் நடந்த மாவட்ட அளவிலான 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார் சாமுண்டீஸ்வரி. இப்படி தன்வசம் 6 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கத்தை வைத்துக் கொண்டு இன்னும்... இன்னும் என்று உயரே உயரே பறக்கும் கழுகாக வெற்றியை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறார்.

மாணவி சாமுண்டீஸ்வரி குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி கூறுகையில், "பள்ளிக்கும், பிற மாணவிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் சாமுண்டீஸ்வரி போட்டிகளில் வெற்றிப்பெற்று சாதிக்கிறார். படிப்பு, விளையாட்டும் இரு கண்களாக பாவித்து முன்னேறிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமையை தேடி தருகின்றனர்" என்றார்.

வரும் காலத்தில் படிப்பும் முக்கியம் ஓட்டப்போட்டி மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும் முக்கியம். இதில் சிறப்பாக பயிற்சி பெற்று மேலும் பல பதக்ககள் வென்று பிறந்த ஊருக்கும், தஞ்சை மண்ணுக்கும், தலைமை ஆசிரியர் மற்றும் பயிற்சி அளிக்கும் உடற்கல்வி ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெருமையை தேடித் தருவேன் என்று வெற்றி சைகை செய்தார் மாணவி சாமுண்டீஸ்வரி. நம்பிக்கையை இழக்காமல், முயற்சியை கைவிடாமல் இருப்பதுதான் வெற்றிப்பாதை. அதில் மேலும் பல பதக்கங்கள் பெறட்டும் இந்த சிங்கப்பெண்.