அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம் கரும்புச்சாறு... கண்ணாடி பாட்டில்களில் பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில் நுட்பங்களை வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளனர். கரும்புச்சாறு மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது பல சத்துக்களையும், வைட்டமின்களையும், தாது பொருட்களையும் கொண்ட நல்ல அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம். சந்தையில் கிடைக்கும் மற்ற செயற்கை பானங்களில் வெறும் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் நிறமிகளும், மணத்திற்கான வேதிப்பொருட்கள் மட்டுமே இருக்கும்.





எனவே கரும்பு சாறினை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும் என தஞ்சை மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். கரும்பு சாறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்கள் விரும்பி அருந்தும் சுவைமிக்க சத்துணவு பானம் ஆகும். கரும்பு சாறில் சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள் அதிகமாக இருப்பதால் அதனை 6 மணி நேரத்திற்கு மேல் வைத்திருந்தால் கெட்டுவிடும். இதை முறையாக எளிய முறையில் பதப்படுத்தி பின்னர் உபயோகப்படுத்த முடியும். இதனை நான்கு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.





கரும்பின் தோலினை நீக்குதல்:


கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வெளிப்புறத் தோலை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அழுக்கில்லாத சாறு கிடைக்கும்.

சாறு பிழிதல்:


இயந்திரங்கள் மூலம் கரும்புச் சாற்றினை பிழிந்து வடிகட்டி வைக்க வேண்டும்.

கரும்புச்சாறில் சுவையைக் கூட்டுதல்:


கரும்பு சாற்றின் சுவையைக் கூட்ட எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பிழிய வேண்டும். 20 கிலோ கரும்புக்கு 5 எலுமிச்சையும், 100 கிராம் இஞ்சியும் சாறு பிழியும் இயந்திரத்தில் கரும்பு சாற்றோடு சேர்க்க வேண்டும்.

வடிகட்டுதல்:


கரும்பு சாறு பிழிந்து எடுத்தவுடன் அதில் இருக்கும் அழுக்கு, தூசு மற்றும் துகள்களை வடி கட்ட வேண்டும். வடிகட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

சூடுபடுத்துதல்:


வடிகட்டிய சாறினை 80 டிகிரி வெப்ப நிலையில் 10 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். 80 டிகிரிக்கு மேல் சூடாக்கினால் சாற்றின் சுவை மாறிவிடும். சூடாக்கும்போது மிதந்து வரும் அழுக்கினை நீக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

பதப்படுத்துவதற்கு சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள்:


சாறு இயல்பான வெப்ப நிலையில் இருக்கும்போது இரண்டாம் நிலை உணவு பதப்படுத்தும் வேதிப்பொருட்களை சேர்க்க வேண்டும். 100 மில்லி கொண்ட கரும்பு சாறில் மொத்த சர்க்கரை அளவு 11.5, அஸ்கார்பிக் அமிலம் 1.5 , பாஸ்பரஸ் 6.8, இரும்பு 0.5 , சுண்ணாம்பு 2.1 சதம் இருக்கும்.

கண்ணாடி பாட்டில்களில் சாறு நிரப்புதல்:


சுத்தம் செய்யப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் 10-15 மில்லி மீட்டர் இடைவெளி விட்டு நிரப்ப வேண்டும் சாறு நிரப்பப்பட்ட பாட்டில்களை 10 நிமிடம் சூடான நீரில் அல்லது ஆவியில் வைக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானங்களை விவசாயிகள் வீட்டு விசேஷங்களுக்கும், சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தி செலவினை குறைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக உபயோகப்படுத்தலாம்.