தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சாலையோர பாலத்தின் தடுப்பில் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த பாக்யராஜ் என்பவரின் மகன் மரியசெல்வராஜ் (37). இவரது மனைவி பத்மாமேரி (31). இவர்களின் மகன் சந்தோஷ் செல்வம் (7), அதே பகுதியை சேர்ந்த சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சின்ன பாண்டி (40), ராணி (40), ஞானம்மாள் (60), பாக்கியராஜ் (62) ஆகிய 11 பேரும் ஒரே காரில் வேளாங்கண்ணி சர்ச்சில் சந்தோஷ் செல்வத்திற்கு மொட்டையடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஊரில் இருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (20ம் தேதி) அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா பகுதியில் கார் வந்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் ராணி, சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்து நடந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயமடைந்த 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.