தஞ்சாவூர்: திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவை ஒட்டி வரும் 30ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. ஆராதனை மகோத்சவ விழா வரும்  26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ம் தேதி ஆராதனை விழா நடைபெறுகிறது. இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இவ்விழா தேசிய நிகழ்ச்சியாக வரும் 27-ம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை அகில இந்திய வானொலியில் நேரலையாக ஒலிபரப்பப்பட உள்ளது. 26-ம் தேதி மாலை 5 மணியளவில் தொடக்க விழா நடக்கிறது.


இந்நிலையில் வரும் 30ம் நடக்கும் பஞ்சரத்ன கீர்த்தனை விழாவை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு  26.01.2024 முதல் 30.01.2024 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வரும் 30.01.2024 (செவ்வாய் கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக வரும் 10.02.2024 சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.