கும்பகோணம்-சென்னை செல்லும் சாலையில் 185 ஆண்டுகள் பழமையான அணைக்கரையிலுள்ள கொள்ளிடம் பாலம் உள்ளது. இரண்டு ஆறுகளுக்குள் அணைக்கரை இருப்பதால், தீவுபோல் காட்சியளிக்கும். இப்பாலங்கள், பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மேலும் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், சுமார் 50 க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கிறது, கொள்ளிடம் அணைக்கரையில் வசித்து வரும் முதலைகள், ஆண்டு தோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசன வாய்க்கால்கள் வழியாக இளநாங்கூர், சிவாயம், செட்டிமேடு, நாஞ்சலுார், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, பெராம்பட்டு, கூத்தன் கோவில், வேளக்குடி, அகரநல்லுார், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன. இந்த முதலைகள், அந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொது மக்கள், கால்நடைகளை கடித்து இழுத்துச் செல்கின்றன. தொடர்ந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போதும், அங்கிருந்து முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள்ளும், மெயின் ரோட்டிற்கும் வந்து விடுகின்றன. இந்நிலையில், அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில், பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில், சுமார் 7 அடி நீளமுள்ள முதலை நடந்து வந்தது. அப்போது பாதசாரி வழியாக நடந்து செல்லும் பொது மக்கள், முதலை வருதையறிந்து அலறி அடித்து கொண்டு திரும்பி ஒடினர். இதனை அறிந்த கிராம மக்கள், முதலையாக இருப்பதால், அதனை, கம்புகளை கொண்டு லாவகமாக துாக்கி, கொள்ளிடம் ஆற்றில் பாலத்தில் இருந்து தள்ளி விட்டனர். பின்னர், முதலை ஆற்றிற்குள் சென்று விட்டது. கிராம மக்கள், முன்எச்சரிகையுடன் பார்த்து விட்டதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த கூறுகையில், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் அதிக வந்தால், முதலைகள் சில நேரங்களில் கரைக்கு வந்து விடும். அப்போது தனது இரைக்காக, கிராமத்திற்குள் புகுந்து, வீடுகளில் உள்ள ஆடு, மாடு, கோழிகளை கடித்து இழுத்து சென்று விடும். இதே போல் கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களின் கால்களை பிடித்து கடித்து விடும். இது போல் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். ஒரு சிலரை ஆற்றிற்குள் இழுத்து சென்றுள்ளது. தற்போது, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால், முதலைகள் கரை வழியாக ஏறி, பாலத்திலுள்ள பாதசாரிகள் நடைபாதையில் வந்து விட்டது. அதனை உயிருடன் கொள்ளிடம் ஆற்றிலேயே விட்டு விட்டோம். எனவே, மாவட்ட நிர்வாகம் முதலைகள் இருக்கும் பகுதியை கண்காணித்து, இரும்பு கதவுகளை அமைக்க வேண்டும், கிராமத்திற்குள் புகாதவாறு கரைகளை உயர்த்தி, இரும்பினாலான தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் பாலத்தில் நடந்து செல்பவர்கள், கிராமத்திலுள்ள பொதுமக்கள், கால்நடைகளின் நிலை கேள்வி குறியாகும் என்றார்.