காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 13 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்தனர்.



இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யாத நிலையில் தற்பொழுது விவசாய நிலத்தில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மழை விட்ட பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்பொழுது பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் படி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் கிராமங்கள் வாரியாக அனைத்து பகுதிகளிலும் வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பயிர் பாதிப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களிலிருந்து பயிர் விளைச்சல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் முழுமையாக அழகி உள்ளது. இரண்டாவது முறையாக நெல் நடவு அல்லது தெளித்தால் மூலமே சாகுபடி பணிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஈடுபட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் அந்த பயிர்கள் அனைத்தும் அழிந்து உள்ள காரணத்தினால் மீண்டும் செலவு செய்வதற்கு விவசாயிகளிடையே பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ள காரணத்தினால் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.