திருவாரூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருவாரூரில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.திரு வாரூர் அருகே உள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் குமரேசன் வயது 35. இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமரேசன் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென குமரேசன் மோட்டார் சைக்களை வழி மறித்தனர். இதில் குமரேசன் சுதாரிப்பதற்கு முன்னதாக அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். தலை முழுமையாக சிதைந்து சம்பவ இடத்திலே குமரேசன் துடி, துடித்து உயிரிழந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடி வருவதற்குள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரேசன் கொலை செய்யப்பட்டது அறிந்த உறவினர்கள், நண்பர்கள் உடனியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். இதில் ஆத்திரமடைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று பதட்டமான சுழ்நிலை ஏற்பட்டது. உடனியாக பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் திருவாரூர்-அரசு மருத்துவக்கல்லூரி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருவாரூர் நகர காவல்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் நேரில் பார்த்த உறவினர் பெண் சுசீலாவிடம் குற்றவாளிகளின் அடையாளம் கண்டறிந்து பிடிப்பதற்கான தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு செல்போன் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் கடந்த சில நாட்கள் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே போல் பட்ட பகலில் வாலிபர் தலையை சிதைக்கும் வகையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக மிகுந்த வாகன போக்குவரத்து மிகுந்த நாகை தேசிய நெடுஞ்சாலை இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது