நாகை அருகே வலிவலத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி மைதானத்தில்  மயங்கி விழுந்த 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருக்குடியைச் சேர்ந்தவர் இளையராஜா-பாசமலர் தம்பதியினரின் மகன் 13 வயதான  கவிப்ரியன். இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் (வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளி) பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு உடற்பயிற்சி மேற்கொண்டு (வாம் ஆஃப்) ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது மாணவர் கவிப்ரியன் மயங்கி விழுந்துள்ள நிலையில், அதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுப்பி உள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை  அளிக்கப்பட்டது.



 

 

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 வாகனம் மூலமாக  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் கவிப்ரியன் ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான  வலிவலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். நாகை அருகே பள்ளி மைதானத்தில்  மயங்கி விழுந்த  மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.