தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 3.60 லட்சம் டன்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.30 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2.30 லட்சம் டன்கள் கொள்முதலாகும் நிலையில், இரண்டு மாதங்களில் கொள்முதல் அதிகமாக வாய்ப்புள்ளது. குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை வைத்து, விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் நாற்றை பறித்து வயல்களில் நடுவார்கள். பின்னர் அதிலிருந்து 130 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் இறுதியில் அறுவடை செய்வார்கள். தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தும்,  வாய்க்கால்களில் தண்ணீர் வராததால்,  பெரும்பாலானோர் ஆழ் குழாய் மின்மோட்டாரை கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் மோட்டார் தண்ணீரை  கொண்டு குறுவை நடவு செய்துள்ளனர்.




தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் தாலுக்காவிலுள்ள உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தனியார் நிறுவனத்திடம் போலியான மலட்டுத்தன்மையுடைய ஏடிடி 36 ரக நெல் விதைகள் சாகுபடி செய்ததால், அனைத்து நெற்கதிர்களிலும் நெல்மணிகள் பதறாகி விட்டது. மேலும் முதல் நாள் பெய்த மழையில், அனைத்து நெற்பயிர்களும் சாய்ந்ததால், தரமற்ற போலியான, மலட்டுத்தன்மையுடைய நெல் விதைகளை, விவசாயிகளிடம்  விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்த போது, போலி நெல் விதைகளை சாகுபடி செய்த வயல்களை பார்வையிட்டு, தரமற்ற விதைகளாக தான்  நெல் மணிகள் பதறாகியுள்ளது என ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகம், போலியான மலட்டுத்தன்மையுடயை நெல் விதைகளை வழங்கிய தனியார் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், நெல் விதைகளை சரிப்பார்த்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்க ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை தலைவர் சாமிநாதன் கூறுகையில்,




தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அயனாவரம், தொன்ராயபாடி, புங்கனுார், பாலைவயல், காங்கேயன்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இதில் அக்கிராமங்களிலுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சாவூரிலுள்ள அரசு அனுமதி பெற்ற விதை நெல் விற்பனையாளரிடமிருந்து ஏடிடி 36 என்ற நெல் ரகத்தை முக்கால் ஏக்கர் வயலுக்கு 30 கிலோ எடையுள்ள ஒரு முட்டை ரூ. 1100 வாங்கி வந்து விதைத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்த வயலில் தற்போது, அனைத்து நெல் மணிகளிலும் பால் பருவம் எனும் சூல் பருவம் வந்திருக்க வேண்டும். ஆனால் அனைத்து நெல் மணிகளிலும் வெறும் பதறாகே உள்ளது.


மேலும், ஏடிடி 36 நெல் ரகம் பலத்த மழை பெய்தால்,உடனடியாக நெற்கதிர்கள், வயலில் சாயாமல்  நிற்கும். மழை பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஏடிடி 36  நெல் ரக விதையை சாகுபடி செய்வார்கள்.  ஆனால், முதல் நாள் பெய்த மழையினால்,சுமார் 200 ஏக்கர் அடியோடு நெற்கதிர்கள் சாய்ந்தது.  இதனால் விவசாயிகள், வயல் மற்றும் நெற்கதிர்களில் ஏதேனும் பிரச்சனையா  என புலம்பி வந்தனர். விவசாயிகளுக்கு வேறு வழிதெரியாததால், இது குறித்து தஞ்சாவூர் மாவட்டம் விதை சான்று வேளாண்மை இயக்குனர் வித்யாவிடம், புகாரளித்தனர்.




புகாரின் பேரில் இயக்குனர் வித்யா, சாய்ந்துள்ள வயல்களில் சென்று சாய்ந்துள்ள கதிர்களையும், பதறாகியுள்ள நெல் மணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது, நெல் விதைகள் தரமற்றதாகும், போலியான, மலட்டுத்தன்மையுடன் உள்ளது என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நெல் விதைகள் வழங்கிய தனியார் நிறுவனத்திடம், இது குறித்து கேட்டனர். அதற்கு, விவசாயிகள் வாங்கிய நெல் விதைகளுக்கான பணத்தை மட்டும் பெற்று கொண்டு செல்லுங்கள் என பதில் கூறினார். ஏழை விவசாயிகள், குறுவை சாகுபடிக்காக, வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும், வெளிநபர்களிடம் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு, உயிரை கொடுத்து சாகுபடி செய்த நெற் பயிர்கள் மலட்டுத்தன்மையுடன், போலியாகவும், தரமற்ற விதைகள் வழங்கி, விவசாயிகள் ஏமாற்றியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதனால் விவசாயிகள் அனைவரும், மனஉளைச்சலில் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக நெல் விதைகளை வழங்கிய நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,  விதை நெல் மணிகளை ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். இது குறித்து விதை சான்று வேளாண்மை இயக்குனர் வித்யா கூறுகையில், நெற்பயிர்கள் அனைத்து சாய்ந்துள்ளது. விவசாயிகளிடம் கலந்து பேசி, யார் காரணம் என்று தீவிரமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.